ஐபிஎல் 2025 போட்டியில் குவாலிஃபையர் 2-ல் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது பஞ்சாப் கிங்ஸ்.
குவாலிஃபையர் 2-ல் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பஞ்சாபில் யுஸ்வேந்திர சஹலும் மும்பையில் ரீஸ் டாப்லியும் சேர்க்கப்பட்டார்கள். ஆட்டம் தொடங்கி வீரர்கள் உள்ளே வந்தபோது மழை குறுக்கிட்டது. இரவு 7.30 மணிக்குத் தொடங்க வேண்டிய ஆட்டம் மழையால் தடைபட்டுக்கொண்டே இருந்தது. ஒருவழியாக இரவு 9 மணிக்கு மேல் மழை நிற்க, இரவு 9.45 மணிக்கு ஓவர்கள் குறைக்கப்படாமல் ஆட்டம் தொடங்கும் என நடுவர்கள் அறிவித்தார்கள்.
அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரில் அடக்கி வாசிக்க, கைல் ஜேமிசன் வீசிய 2-வது ஓவரில் ஜானி பேர்ஸ்டோ சிக்ஸர் அடித்து அதிரடியைத் தொடக்கி வைத்தார். இதே ஓவரில் ரோஹித் சர்மாவின் கேட்ச் வாய்ப்பை அஸ்மதுல்லா ஓமர்ஸாய் தவறவிட்டார். இம்முறை அதிர்ஷ்டத்தை ரோஹித் சர்மா சரியாகப் பயன்படுத்தவில்லை. மூன்றாவது ஓவரில் மார்கஸ் ஸ்டாய்னிஸை கொண்டு வர 2-வது பந்திலேயே ஆட்டமிழந்தார் ரோஹித்.
திலக் வர்மா வந்தவுடனே 2-வது பந்தில் சிக்ஸர் அடித்து கலக்கினார். பேர்ஸ்டோ மற்றும் திலக் வர்மா அதிரடியை வெளிப்படுத்த 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்தது மும்பை. பவர்பிளே முடிந்தவுடன் வைஷாக் விஜயகுமார் வந்தார். முதல் ஓவரிலேயே பேர்ஸ்டோ (38) விக்கெட்டை வீழ்த்தினார். விக்கெட் விழுந்த நெருக்கடியை உணராமல் அவ்வப்போது சிக்ஸர், பவுண்டரி அடித்து திலக் வர்மாவும் சூர்யகுமார் யாதவும் பஞ்சாப் கேப்டனுக்கு அழுத்தம் கொடுத்தார்கள். 10 ஓவர்களில் 102 ரன்கள் எடுத்தது மும்பை.
நடு ஓவர்களில் பஞ்சாபின் துருப்புச் சீட்டான சஹலிடம் விக்கெட்டை கொடுக்காமல் அவரது பந்தை பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் அனுப்பி அசத்தினார் சூர்யகுமார் யாதவ். ஐபிஎல் 2025-ல் 700 ரன்களை கடந்ததன் மூலம், ஓர் ஐபிஎல் போட்டியில் 700 ரன்களை கடக்கும் முதல் நடுவரிசை பேட்டர் எனும் பெருமையைப் பெற்றார். சஹலின் கடைசி ஓவரிலும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்த சூர்யகுமார் இதே ஓவரில் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே திலக் வர்மாவும் ஜேமிசனிடம் வீழ்ந்தார். 3-வது விக்கெட்டுக்கு 42 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்த இருவரும் தலா 44 ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தது மும்பைக்குப் பேரிடியாக விழுந்தது. 15 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்தது மும்பை.
ஹார்திக் பாண்டியா நிதானித்தாலும், நமன் திர் 17-வது ஓவரில் அர்ஷ்தீப் பந்தில் 3 பவுண்டரிகள் அடித்து மிரட்டினார். 18-வது ஓவரில் இரு பவுண்டரிகள் கொடுத்தாலும் குறைவான வேகத்தில் ஷார்ட் பந்தை வீசி ஹார்திக் பாண்டியாவை வீழ்த்தினார் அஸ்மதுல்லா ஓமர்ஸாய். 19-வது ஓவரில் அர்ஷ்தீப் பந்தில் மீண்டும் இரு பவுண்டரிகளை நொறுக்கிவிட்டார் நமன் திர். கடைசி ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த நமன் திர், 3-வது பந்தில் ஓமர்ஸாயிடம் வீழ்ந்தார். இவர் 18 பந்துகளில் 37 ரன்கள் விளாசி மும்பைக்குத் தேவையான கடைசி நேர அதிரடியைக் கொடுத்தார். நமன் திர் விக்கெட்டுக்கு பிறகு கடைசி ஓவரில் பவுண்டரி இல்லை. 20 ஓவர்களில் மும்பை 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. மும்பை முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு மேல் குவித்து தோற்றதே இல்லை.
204 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பிரியான்ஷ் ஆர்யா மற்றும் இம்பாக்ட் வீரர் பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினார்கள். முதலிரு ஓவர்களில் பெரிய ஆரவாரம் இல்லை. டிரென்ட் போல்ட் தனது 2-வது ஓவரில் குறைவான வேகத்தில் ஷார்ட் பந்தை வீச, பிரப்சிம்ரன் விக்கெட்டை இழந்தார். ஜோஷ் இங்லிஸ் வந்த வேகத்தில் இரு பவுண்டரிகள் அடித்து ரன் ரேட்டை உயர்த்துவதில் குறியாக இருந்தார். ரீஸ் டாப்லி ஓவரில் ஆர்யாவும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தார். ஜஸ்பிரித் பும்ராவை கொண்டு வந்தார் பாண்டியா. மும்பையின் நம்பிக்கைத் தூணான இவருடைய ஓவரில் ஜோஷ் இங்லிஸ் இரு பவுண்டரி, இரு சிக்ஸர்கள் அடித்து 20 ரன்கள் எடுத்தார். பும்ரா ஓவரில் 20 ரன்கள் என்பது மும்பைக்குப் பெரும் அடி.
இருந்தபோதிலும், அஷ்வனி குமார் தனது முதல் பந்திலேயே ஆர்யா விக்கெட்டை வீழ்த்தினார். இங்லிஸ் அதிரடியால் பஞ்சாப் அணி 6 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்தாலும் 64 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயஸ் ஐயர் பவுண்டரிக்கு முனைப்பு காட்டாமல் பந்துக்கு ஒரு ரன் எடுத்து களத்தில் நேரத்தைச் செலவிட்டார். ஹார்திக் பாண்டியா தனது முதல் ஓவரில் குறைவான வேகத்தில் வீசிய ஷார்ட் பந்தில் இங்லிஸ் விக்கெட்டை வீழ்த்தி திருப்புமுனை உண்டாக்கினார். இவர் 21 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த நேஹல் வதேரா அதிர்ஷ்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு விளையாடினார். ஹார்திக் பாண்டியா வீசிய 10-வது ஓவரில் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகள் அடித்தார். போல்ட், கைக்கு வந்த எளிதான கேட்ச் வாய்ப்பைத் தவறவிட்டார். 10 ஓவர்களில் பஞ்சாப் 98 ரன்கள் எடுத்திருந்தது. 3 விக்கெட்டுகளை இழந்திருந்த பஞ்சாபுக்கு 8 ஓவர்களில் 95 ரன்கள் தேவைப்பட்டன. ஆட்டம் சமநிலையில் இருந்தது.
15 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து விளையாடி வந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், ரீஸ் டாப்லி வீசிய 13-வது ஓவரில் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்கள் அடித்து ஆட்டத்தைப் பஞ்சாப் பக்கம் இழுத்தார். போல்ட் ஓவரில் வதேரா இரு பவுண்டரிகள் அடித்தார். வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 11-க்கு கீழ் குறைந்தது. பும்ராவை கொண்டு வந்தும் விக்கெட் கிடைக்கவில்லை. கடைசி 5 ஓவர்களில் 57 ரன்கள் தேவைப்பட்டன. 16-வது ஓவரை சிக்ஸர் அடித்து தொடங்கிய வதேரா, இதே ஓவரில் 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எனினும், நெருக்கடியை உடனடியாக மும்பை பக்கம் திருப்ப இதே ஓவரில் சிக்ஸர் அடித்து அசத்தினார் ஷ்ரேயஸ் ஐயர். போல்ட் ஓவரில் பவுண்டரி அடித்த ஷ்ரேயஸ் 27 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
இதே ஓவரில் ஷஷாங்க் சிங் மிக மோசமான பொறுப்பற்ற முறையில் ரன் அவுட் ஆகி தன் அணிக்கு அழுத்தத்தை அதிகரித்தார். இருந்தாலும், நான் பார்த்துக்கொள்கிறேன் என இதே ஓவரில் ஒரு பவுண்டரியையும் பும்ரா ஓவரில் ஒரு பவுண்டரியையும் அடித்தார் ஷ்ரேயஸ். பும்ரா ஓவரில் 8 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டாலும், கடைசி இரு ஓவர்களில் 23 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. 19-வது ஓவரில் ஷ்ரேயஸ் முதல் பந்தை சிக்ஸருக்கு அனுப்பி அஷ்வனி குமாரை நெருக்கடிக்குள்ளாக்க, அடுத்த பந்தை அவர் நோ-பாலாக வீசினார். ஃப்ரீ ஹிட்டிலும் ஒரு சிக்ஸரை நொறுக்கிவிட்டார் ஷ்ரேயஸ். 10 பந்துகளில் 10 ரன்கள் தேவை. இதே ஓவரில் மேலும் இரு சிக்ஸர்களை அடித்து 19-வது ஓவரிலேயே ஆட்டத்தை முடித்துவைத்தார் ஷ்ரேயஸ் ஐயர். மும்பை முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு மேல் குவித்து தோல்வியடைவது இதுவே முதன்முறை.
19 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்த பஞ்சாப் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷ்ரேயஸ் ஐயர் 41 பந்துகளில் 5 பவுண்டரி, 8 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் விளாசினார். இந்த வெற்றியின் மூலம் 11 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் அணி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது. கடந்த முறை கொல்கத்தாவுக்குக் கோப்பை வென்று கொடுத்த ஷ்ரேயஸ் ஐயர் இம்முறை பஞ்சாப் கிங்ஸை இறுதிச் சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இறுதிச் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் மோதுகின்றன. இரு அணிகளுமே இதுவரை ஒருமுறை கூட கோப்பை வென்றதில்லை.