விளையாட்டு

ஆஸ்திரேலிய ஏ தொடர்: இந்திய ஏ அணியின் கேப்டன் மாற்றம்! | India A | Shreyas Iyer |

தமிழக அணியின் வேகப்பந்து வீச்சாளரான குர்ஜப்னீத் சிங், கடந்த வருடம் தமிழக ரஞ்சி அணியில் இடம்பிடித்தார். இப்போது இந்திய ஏ அணி வரை வந்துவிட்டார்.

கிழக்கு நியூஸ்

ஆஸ்திரேலிய ஏ அணியுடனான ஒருநாள் தொடருக்கு ரஜத் படிதார் மற்றும் திலக் வர்மாவுக்குப் பதில் ஷ்ரேயஸ் ஐயர் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்குப் பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய ஏ அணி இரு நான்கு நாள் ஆட்டத்துக்குப் பிறகு, மூன்று ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் ஆட்டம் செப்டம்பர் 30-ல், இரண்டாவது ஆட்டம் அக்டோபர் 3-ல், மூன்றாவது ஆட்டம் அக்டோபர் 5-ல் நடைபெறவுள்ளது.

இந்தத் தொடரில் முதல் ஆட்டத்தில் ரஜத் படிதார் கேப்டனாகவும் அடுத்த இரு ஆட்டங்களில் திலக் வர்மா கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டிருந்தார்கள். முதல் தர கிரிக்கெட்டிலிருந்து இடைவெளி எடுத்துள்ள ஷ்ரேயஸ் ஐயர், ஒருநாள் தொடருக்கான கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய ஏ அணியுடனான முதல் நான்கு நாள் ஆட்டத்தில் இந்திய அணியை வழிநடத்திய ஷ்ரேயஸ் ஐயர், இரண்டாவது ஆட்டத்துக்கு முன்பு பிசிசிஐயிடம் பேசி அணியிலிருந்து வெளியேறினார்.

ஆசியக் கோப்பை முடிந்து இந்திய ஏ அணியுடன் இணையும் திலக் வர்மா கடைசி இரு ஆட்டங்களில் துணை கேப்டனாக செயல்படவுள்ளார். ஆசியக் கோப்பை முடிந்த பிறகு, திலக் வர்மாவுடன் அபிஷேக் சர்மா, ஹர்ஷித் ராணா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் இந்திய ஏ அணியுடன் இணைகிறார்கள். முதல் ஆட்டம் முடிந்தவுடன் பிரியன்ஷ் ஆர்யா மற்றும் சிமர்ஜீத் சிங் அணியிலிருந்து வெளியேறுகிறார்கள்.

தமிழக அணியின் வேகப்பந்து வீச்சாளரான குர்ஜப்னீத் சிங் இந்திய ஏ அணியில் எல்லா ஆட்டங்களிலும் இடம்பெற்றுள்ளார். 6 அடி 3 அங்குலம் உயரமுள்ள 26 வயது குர்ஜப்னீத் சிங், பஞ்சாபின் லுதியானாவில் பிறந்தவர். ஹரியாணாவில் வளர்ந்த குர்ஜப்னீத், 17 வயது முதல் தமிழ்நாட்டில் வசித்து வருகிறார். கடந்த வருடம் தமிழக ரஞ்சி அணியில் இடம்பிடித்தார். இப்போது இந்திய ஏ அணி வரை வந்துவிட்டார்.

துலீப் கோப்பைப் போட்டியில் மத்திய மண்டலத்துக்குக் கோப்பையை வென்று கொடுத்த ரஜத் படிதார், தற்போது ரெஸ்ட் ஆஃப் இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இரானி கோப்பையில் ரஞ்சி கோப்பையை வென்ற விதர்பாவுக்கு எதிராக ரெஸ்ட் ஆஃப் இந்தியாவை வழிநடத்துகிறார் படிதார். இந்த ஆட்டம் அக்டோபர் 1 அன்று நாக்பூரில் தொடங்குகிறது.

முதல் ஆட்டத்துக்கான இந்திய ஏ அணி

ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஆயுஷ் பதோனி, சுயான்ஷ் ஷெட்கே, விப்ராஜ் நிகம், நிஷாந்த் சிந்து, குர்ஜப்னீத் சிங், யுத்விர் சிங், ரவி பிஷ்னாய், அபிஷேக் பொரெல் (விக்கெட் கீப்பர்), பிரியன்ஷ் ஆர்யா, சிமர்ஜீத் சிங்.

கடைசி இரு ஆட்டங்களுக்கான இந்திய ஏ அணி

ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஆயுஷ் பதோனி, சுயான்ஷ் ஷெட்கே, விப்ராஜ் நிகவம், நிஷாந்த் சிந்து, குர்ஜப்னீத் சிங், யுத்விர் சிங், ரவி பிஷ்னாய், அபிஷேக் பொரெல் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங்.

ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி

ரஜத் படிதார் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், ஆர்யன் ஜுயல் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), யஷ் துல், ஷைக் ரஷீத், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), தனுஷ் கோடியான், மானவ் சுதர், குர்னூர் பிரார், கலீல் அஹமது, ஆகாஷ் தீப், அன்ஷுல் கம்போஜ், சாரன்ஷ் ஜெயின்.

Shreyas Iyer | Team India A | India A | BCCI | BCCI Domestic | Australia A | Rajat Patidar | Ruturaj Gaikwad | Gurjapneet Singh |