ஷ்ரேயஸ் ஐயர் ANI
விளையாட்டு

நெருப்பாற்றில் நீந்தி கரைசேரும் ஷ்ரேயஸ் ஐயர்!

யோகேஷ் குமார்

நடப்பு ஐபிஎல் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு கேகேஆர் அணி எளிதாக தகுதி பெற்றது போல் தெரிந்தாலும், அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் கடந்து வந்த பாதை மிகவும் சுவாரசியமானது.

கடந்த ஒரு ஆண்டில் ஷ்ரேயஸ் ஐயரின் வாழ்க்கையில் என்ன நடந்தது? என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

முதுகு வலி காரணமாக ஐபிஎல் 2023 போட்டியிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகினார். இதைத் தொடர்ந்து முழு உடற்தகுதியுடன் ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். இவர் தேர்வு செய்யப்பட்டதில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், உலகக் கோப்பைக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் ஆட்டத்தில் சதம் அடித்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதைத் தொடர்ந்து உலகக் கோப்பையில் 66.25 சராசரியுடன் 530 ரன்களை குவித்து அசத்தினார். இதில் 3 அரை சதமும், 2 சதமும் அடங்கும். இதில் ஒரு சதத்தை அரையிறுதி ஆட்டத்தில் அடித்தார். இந்த உலகக் கோப்பையில் கோலி, ரோஹித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணிக்கு அதிகமான ரன்களை குவித்தவர் ஷ்ரேயஸ் ஐயர் தான்.

இதைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில், 2 ஆட்டங்களில் விளையாடிய ஐயர் 41 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதல் இரு ஆட்டங்களில் பங்கேற்று 104 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதைத் தொடர்ந்து முதுகுத் தசைப்பிடிப்பு காரணமாக ஸ்ரேயஸ் ஐயர் அவதிப்பட்டு வந்த நிலையில் அவர் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்டுகளில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டின் முக்கியத்துவம் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இந்திய வீரர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதினார். அதில், மத்திய ஒப்பந்தத்தில் உள்ள இந்திய வீரர்கள் நாட்டுக்காக விளையாட விரும்பினால், அவர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் நிரூபிக்க வேண்டும் என கூறினார். மேலும் உள்ளூர் கிரிக்கெட்டில் பங்கேற்காதது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.

முன்னதாக, காயத்தால் ஓய்வு பெற்ற ஐயர் முழுமையாக குணமடைந்துவிட்டதாக என்சிஏ தெரிவித்த பின்பும் அவர் எந்த உள்ளூர் கிரிக்கெட்டிலும் பங்கேற்கவில்லை எனத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து 2023 - 2024 பருவத்துக்கான இந்திய கிரிக்கெட் வீரர்களுடனான பிசிசிஐ ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது. 30 வீரர்கள் கொண்ட இப்பட்டியலில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் நீக்கப்பட்டார்.

இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர், “என்சிஏ ஒருவர் விளையாட முழு உடற்தகுதியைப் பெற்றுள்ளார் என தெரிவித்தப் பின்பும் அவர் எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை என்றால் எப்படி அவரை ஒப்பந்தத்தில் சேர்க்க முடியும்” என கேள்வியை எழுப்பினார்.

நீண்ட நாள்களாக ஓய்வில் இருந்த ஷ்ரேயஸ் ஐயர் தமிழக அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் களமிறங்கினார். இறுதிச் சுற்றில் 95 ரன்கள் எடுத்து மும்பை அணி வெற்றி பெற முக்கியமான காரணமாக இருந்தார். மீண்டும் ரஞ்சி கோப்பை இறுதிச் சுற்றில் முதுகு வலியால் பாதிக்கப்பட்ட ஸ்ரேயஸ் ஐயர், ஐபிஎல் 2024 போட்டியில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்பட்டது.

இதன் பிறகு அவர் மீண்டும் காயத்தில் இருந்து குணமடைந்து கேகேஆர் அணியில் இணைந்தார்.

இந்நிலையில் அவர் தலைமையில் கேகேஆர் அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து, முதல் அணியாக இறுதிச் சுற்றுக்கும் முன்னேறியுள்ளது. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 58 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதைத் தொடர்ந்து அவரின் மேல் வைக்கப்பட்ட அனைத்து விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து அசத்தியுள்ளார் ஷ்ரேயஸ் ஐயர்.