இந்திய ஆல்-ரௌண்டர் ஷார்துல் தாக்குர் இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி கிரிக்கெட்டில் எஸ்ஸெக்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்திய அணியின் ஆல்-ரௌண்டராக உள்ள ஷார்துல் தாக்குர் இந்தியாவுக்காக 100-க்கும் மேற்பட்ட சர்வதேச விக்கெட்டுகளை வீழத்தியுள்ளார். எனினும், அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிஜிடி தொடரில் ஷார்துல் தாக்குர் சேர்க்கப்படவில்லை. ஆல்-ரௌண்டராக அறிமுக வீரர் நிதிஷ் ரெட்டி இந்திய அணியுடன் பயணித்து ஜொலித்தார்.
இந்திய அணியில் இடம் கிடைக்காததைத் தொடர்ந்து, ரஞ்சி கோப்பையில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார் ஷார்துல் தாக்குர். தேசிய அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் ரஞ்சியில் ரன்களை குவித்து வருகிறார். விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார்.
ரஞ்சியில் 11 இன்னிங்ஸில் 39.9 சராசரியில் 439* ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில் 17 இன்னிங்ஸில் 21.67 சராசரியில் 32* விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மும்பை அணி ரஞ்சி அரையிறுதிக்குள் நுழைய இவரும் முக்கியப் பங்கு.
இந்த நிலையில், இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி கிரிக்கெட்டில் எஸ்ஸெக்ஸ் அணிக்காக ஒப்பந்தம் ஆகியுள்ளார் ஷார்துல் தாக்குர். ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் ஆட்டங்களில் எஸ்ஸெக்ஸ் அணிக்காக ஷார்துல் விளையாடவுள்ளார். ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்தவோர் அணியாலும் ஷார்துல் தாக்குர் தேர்வு செய்யப்படவில்லை. எனவே, இந்திய வீரர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடும்போது கிடைக்கும் இடைவெளியை கவுன்டியில் விளையாட பயன்படுத்தியுள்ளார் ஷார்துல் தாக்குர்.
அதேசமயம், ஜூன் மாதம் இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் இடம்பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தவும் கவுன்டி கிரிக்கெட் ஷார்துலுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(* - ரஞ்சி அரையிறுதியில் மும்பை விளையாடி வருகிறது)