ANI
விளையாட்டு

சதமடித்து மும்பையைக் காப்பாற்றிய ஷர்துல் தாக்குர்!

ரோஹித் சர்மா, ஜெயிஸ்வால், ரஹானே, ஸ்ரேயஸ் ஐயர், ஷிவம் டுபே போன்ற மும்பை நட்சத்திர வீரர்கள் தடுமாற்றம்.

கிழக்கு நியூஸ்

2015-க்குப் பிறகு ரோஹித் சர்மா ரஞ்சி கோப்பையில் விளையாடுவதால் அதிகக் கவனத்துக்கு ஆளாகியுள்ளது மும்பை - ஜம்மு & காஷ்மீர் இடையிலான ரஞ்சி ஆட்டம்.

மும்பையில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் மும்பை 120 ரன்களுக்குச் சுருண்டது. ஜம்மு & காஷ்மீர் அணி முதல் இன்னிங்ஸில் 206 ரன்கள் எடுத்து 86 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்நிலையில் மும்பை அணி 2-வது இன்னிங்ஸிலும் தடுமாறி வருகிறது. 2-வது இன்னிங்ஸிலும் ரோஹித் சர்மா, ஜெயிஸ்வால், ரஹானே, ஸ்ரேயஸ் ஐயர், ஷிவம் டுபே போன்ற மும்பை நட்சத்திர வீரர்கள் தடுமாறினாலும் முதல் இன்னிங்ஸில் அரை சதமெடுத்த ஷர்துல் தாக்குர், 2-வது இன்னிங்ஸில் மேலும் சிறப்பாக விளையாடி சதமடித்து மும்பையை சரிவிலிருந்து மீட்டெடுத்தார்.

2-வது நாள் முடிவில் மும்பை அணி, 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்துள்ளது. ஷர்துல் தாக்குர் 113, தனுஷ் கோட்டியான் 58 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

கடந்த வருடம் முழுக்க இந்திய அணியில் இடம்பெறாத ஷர்துல் தாக்குர், ரஞ்சி கோப்பையில் சிறப்பாக விளையாடி வருகிறார். எனவே, ஷர்துல் தாக்குர் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிப்பாரா என்கிற ஆர்வம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.