ANI
விளையாட்டு

பிஜிடி தொடரில் ஷமி சேர்க்கப்பட மாட்டார்: பிசிசிஐ

"பிஜிடி தொடரில் மீதமுள்ள இரு டெஸ்டுகளில் சேர்க்கப்படுவதற்கான உடற்தகுதியில் முஹமது ஷமி இல்லை."

கிழக்கு நியூஸ்

ஆஸ்திரேலியாவுடனான பிஜிடி தொடரில் சேர்க்கப்படுவதற்கான உடற்தகுதியில் முஹமது ஷமி இல்லை என பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.

2023 உலகக் கோப்பைக்குப் பிறகு முஹமது ஷமி இந்தியாவுக்காக எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை. குதிகால் காயம் காரணமாக பிப்ரவரியில் அவர் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். இதிலிருந்து குணமடையும்போது நிறைய பின்னடைவுகள் அவருக்கு ஏற்பட்டுள்ளன.

ரஞ்சி கோப்பையில் களமிறங்கினார். தொடர்ந்து, சையது முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் விளையாடினார். விஜய் ஹசாரே போட்டியிலும் விளையாடத் தேர்வாகியுள்ளார். காயத்திலிருந்து குணமடைந்தபோதும், அவருடைய முழங்காலில் வீக்கம் ஏற்படுவதாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார். இதன் காரணமாக அவர் தொடர்ச்சியாகக் கண்காணிப்பில் உள்ளார்.

இந்த நிலையில், முஹமது ஷமியின் உடற்தகுதி குறித்து பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

"வலது குதிகால் அறுவைச் சிகிச்சையிலிருந்து குணமடைந்து வரும் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முஹமது ஷமியை பிசிசிஐ மருத்துவக் குழு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. குதிகால் பிரச்னையிலிருந்து ஷமி முற்றிலுமாகக் குணமடைந்துவிட்டார்.

ரஞ்சி கோப்பையில் பெங்கால் அணிக்காக விளையாடிய முஹமது ஷமி, நவம்பரில் மத்தியப் பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 43 ஓவர்கள் வீசினார். இதைத் தொடர்ந்து, சையது முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் அனைத்து 9 ஆட்டங்களிலும் விளையாடினார். கூடுதலாக, டெஸ்டில் விளையாடத் தயாராவதற்காக, அதிக ஓவர்கள் வீசும் திறனைக் கட்டமைக்க கூடுதல் பந்துவீச்சு பயிற்சிகளிலும் அவர் ஈடுபட்டார்.

ஆனால், அவருடைய இடது முழங்காலில் லேசான வீக்கம் ஏற்பட்டது. நீண்ட நாள்களுக்குப் பிறகு அதிக ஓவர்கள் வீசுவதால், வீக்கம் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.

தற்போதைய மருத்துவக் கண்காணிப்பின் மூலம், அதிக ஓவர்கள் பந்துவீசும்போது, ஷமியின் முழங்காலில் ஏற்படும் வீக்கத்தைக் கட்டுப்படுத்த கூடுதல் நேரம் தேவைப்படும் என பிசிசிஐ மருத்துவக் குழு தீர்மானித்துள்ளது. இதன் காரணமாக, பிஜிடி தொடரில் மீதமுள்ள இரு டெஸ்டுகளில் சேர்க்கப்படுவதற்கான உடற்தகுதியில் முஹமது ஷமி இல்லை.

டெஸ்டில் விளையாடத் தேவையான அளவுகோலை அடைய, அவருடையப் பந்துவீச்சு சுமையை அதிகரிக்க பிசிசிஐ மருத்துவக் குழுவினரின் வழிகாட்டுதலில் ஷமி தொடர்ந்து பயிற்சியை மேற்கொள்ளவுள்ளார். முழங்கால் அடையும் முன்னேற்றத்தைப் பொறுத்தே, விஜய் ஹசாரே போட்டியில் ஷமி விளையாடுவது முடிவு செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.