விளையாட்டு

ஷகிப் அல் ஹசன் பந்துவீச ஐசிசி தடை

ஷகிப் அல் ஹசனின் பந்துவீச்சு மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும். இதில் தனது பந்துவீச்சு முறையை விதிகளுக்கு உள்பட்டு சரி செய்துகொண்டால்...

கிழக்கு நியூஸ்

பந்துவீச்சு முறையில் விதிமீறல் காரணமாக வங்கதேச ஆல்-ரௌண்டர் ஷகிப் அல் ஹசன் பந்துவீசுவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தடை விதித்துள்ளது.

ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கூட்டமைப்புகள் நடத்தும் போட்டிகள், உள்நாட்டுப் போட்டிகள், சர்வதேச போட்டிகள் என எதிலும் ஷகிப் அல் ஹசன் பந்துவீசக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் கவுன்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக ஒரேயொரு ஆட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் விளையாடினார் ஷகிப் அல் ஹசன். அப்போது இவருடையப் பந்துவீச்சு முறை நடுவர்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.

டிசம்பர் தொடக்கத்தில் லண்டனிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் சுயாதீன பரிசோதனையில் ஷகிப் அல் ஹசன் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டார். இதில் ஷகிப் அல் ஹசனின் பந்துவீச்சு முறை விதிமீறலில் இருப்பது கண்டறியப்பட்டது. பந்துவீசும்போது பந்துவீச்சாளரின் முழங்கை மடங்குவது 15 டிகிரிக்கும் குறைவாக இருக்க வேண்டும்.

இந்தப் பரிசோதனையில் ஷகிப் அல் ஹசன் தோல்வியடைந்ததையடுத்து, அவர் பந்துவீச இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. டிசம்பர் 10 முதல் தடை அமலுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, ஷகிப் அல் ஹசன் பந்துவீச ஐசிசியும் தடை விதித்துள்ளது.

வங்கதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் கட்டுப்பாட்டில் நடைபெறும் அனைத்து விதமான போட்டிகளிலிருந்தும் ஷகிப் அல் ஹசன் பந்துவீச தடைவிதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, வங்கதேசத்துக்கு வெளியே நடத்தப்படும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டிலும் ஷகிப் அல் ஹசன் பந்துவீச தடைவிதிக்கப்பட்டுள்ளது."

ஷகிப் அல் ஹசனின் பந்துவீச்சு மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும். இதில் தனது பந்துவீச்சு முறையை விதிகளுக்கு உள்பட்டு சரி செய்துகொண்டால், அவர் மீண்டும் பந்துவீசலாம்.