விளையாட்டு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டுடன் ஓய்வு: ஷகிப் அல் ஹசன்

"சர்வதேச டி20யை பொறுத்தவரை உலகக் கோப்பையில் நான் விளையாடியதுதான் என்னுடையக் கடைசி சர்வதேச டி20."

கிழக்கு நியூஸ்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டுடன் ஓய்வுபெறவுள்ளதாக வங்கதேச ஆல்-ரௌண்டர் ஷகிப் அல் ஹசன் அறிவித்துள்ளார்.

இந்தியா, வங்கதேசம் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கான்பூரில் நாளை தொடங்குகிறது. இதற்கு முன்னதாக, வங்கதேச ஆல்-ரௌண்டர் ஷகிப் அல் ஹசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது டெஸ்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

"தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட நான் தயாராக உள்ளேன். ஆனால், வங்கதேசத்தில் நிறைய விஷயங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே, என்னைச் சார்ந்து மட்டுமே எதுவும் கிடையாது.

டெஸ்ட் கிரிக்கெட் பற்றிய என்னுடையத் திட்டங்களை வங்கதேச கிரிக்கெட் வாரியத்துடன் பகிர்ந்துள்ளேன். குறிப்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வங்கதேசத்தில் நடைபெறும் டெஸ்ட் தொடர் குறித்து பேசியுள்ளேன். இதுதான் என்னுடையக் கடைசி டெஸ்ட் தொடர்.

வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் ஃபரூக்கி மற்றும் அணித் தேர்வுக் குழுவினருடன் இதுகுறித்து பேசியுள்ளேன். வாய்ப்பு கிடைத்தால், நான் விளையாடக் கூடிய சூழல் உருவானால், மிர்பூரில் நடைபெறும் டெஸ்ட் தான் என்னுடையக் கடைசி டெஸ்டாக இருக்கும். நான் பாதுகாப்பு உணர்வுடன் விளையாடுவதற்கான சூழலை உறுதி செய்ய வங்கதேச கிரிக்கெட் வாரியம் முயற்சித்து வருகிறது. அதே சமயம், நான் எந்தத் தடையுமின்றி நாட்டைவிட்டு வெளியேறவும் வேண்டும்.

நான் வங்கதேச குடிமகன் என்பதால், வங்கதேசம் செல்வதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. என்னுடையப் பாதுகாப்பு குறித்து தான் என்னுடையக் கவலை. நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் இதே கவலைதான். சூழல் முன்னேற்றம் கண்டு வருவதாக நினைக்கிறேன். இதற்கு ஒரு தீர்வு இருந்தாக வேண்டும்.

சர்வதேச டி20யை பொறுத்தவரை உலகக் கோப்பையில் நான் விளையாடியதுதான் என்னுடையக் கடைசி சர்வதேச டி20. அணித் தேர்வுக் குழுவினர் மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் இதுகுறித்து ஆலோசனை நடத்திவிட்டேன்" என்றார் ஷகிப் அல் ஹசன்.

இந்தியாவுக்கு எதிரான கான்பூர் டெஸ்டுக்கு பிறகு வங்கதேசம் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. அக்டோபரில் நடைபெறும் இந்த டெஸ்ட் தொடருக்கு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் பாதுகாப்புக்கான ஒப்புதலை இன்னும் அளிக்கவில்லை. இந்த டெஸ்ட் தொடர் நடைபெறும் என்றே பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்த டெஸ்ட் தொடர் நடைபெறவில்லையென்றால், கான்பூர் டெஸ்ட் தான் ஷகிப் அல் ஹசனின் கடைசி டெஸ்டாக அமையும் எனத் தெரிகிறது.

சர்வதேச டி20

  • ஆட்டங்கள் - 129

  • ரன்கள் - 2,551

  • பேட்டிங் சராசரி - 23.19

  • ஸ்டிரைக் ரேட் - 121.18

  • விக்கெட்டுகள் - 149

டெஸ்ட்

  • ஆட்டங்கள் - 70

  • ரன்கள் - 4,600

  • பேட்டிங் சராசரி - 38.33

  • விக்கெட்டுகள் - 242

  • பந்துவீச்சு சராசரி - 31.85