சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் ஆவது குறித்த சாத்தியக்கூறுகள் பற்றி இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் ஏலம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக வீரர்களைத் தக்கவைப்பது மற்றும் விடுவிப்பது குறித்த ஆலோசனையில் ஐபிஎல் அணி நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஒரு சில அணி நிர்வாகங்கள் டிரேட் செய்வது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன.
சஞ்சு சாம்சனை டிரேட் செய்வது தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன. சஞ்சு சாம்சனுக்கு மாற்றாக ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரணைக் கொடுக்க சிஎஸ்கே முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.
சஞ்சு சாம்சன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், சிஎஸ்கே நிர்வாகம் சார்பில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான டிரேட் பேச்சுவார்த்தை பற்றி அஸ்வின் தனது யூடியூப் சேனலில் விளக்கமாகப் பேசியுள்ளார். அப்போது சிஎஸ்கே அணியால் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டால், முதல் பருவத்திலேயே அவரிடம் கேப்டன் பொறுப்பு வழங்கப்படுவது சந்தேகம் என்று அவர் கூறியிருக்கிறார்.
அஸ்வின் கூறியதாவது:
"சஞ்சு சாம்சனுக்கு சிஎஸ்கேவில் கேப்டன் பொறுப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. காரணம், சிஎஸ்கேவில் இதுதான் அவருடைய முதல் ஆண்டாக இருக்கும். வந்தவுடனே அவரிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைப்பார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை டிரேட் நடைபெறும் பட்சத்தில் எதிர்காலத்தில் அணியை வழிநடத்துவதற்கான ஒரு தேர்வாக சஞ்சு சாம்சன் இருக்கலாம்" என்றார் அஸ்வின்.
Sanju Samson cannot become CSK Captain straightaway if trade happens, says Ashwin
Sanju Samson | Chennai Super Kings | Rajasthan Royals | Ravindra Jadeja | Sam Curran | MS Dhoni | Ashwin | CSK | RR | IPL Trade | Trade Talks |