கோப்புப்படம் 
விளையாட்டு

ஹிந்தி தேசிய மொழியா?: சஞ்சய் பாங்கர் பேச்சால் சர்ச்சை! | Sanjay Bangar |

வாஷிங்டன் சுந்தர், கேஎல் ராகுல் இடையிலான உரையாடல் குறித்த வர்ணனையின்போது சஞ்சய் பாங்கர் பேசியது சர்ச்சையாகியிருக்கிறது.

கிழக்கு நியூஸ்

இந்தியா, நியூசிலாந்து ஒருநாள் ஆட்டத்தின்போது, வர்ணனையில் இருந்த சஞ்சய் பாங்கர் ஹிந்தியை தேசிய மொழியாகக் கூறியதாகச் சொல்லி அவருக்கு எதிராக விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன.

இந்தியா, நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் வதோதராவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்தது. இலக்கை விரட்டி விளையாடிய இந்திய அணி 49 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 93 ரன்கள் எடுத்த விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

முதல் இன்னிங்ஸில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீசிக் கொண்டிருந்தபோது கீப்பர் கேஎல் ராகுல் அவருக்கு அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருந்தார். வர்ணனையில் முன்னாள் வீரர்கள் வருண் ஆரோன் மற்றும் சஞ்சய் பாங்கர் இருந்தார்கள்.

வர்ணனையில் வருண் ஆரோன் கூறியதாவது:

"வாஷிங்டன் சுந்தரிடம் கேஎல் ராகுல் தமிழில் பேச வேண்டியிருக்கும் என்பதை நான் குறிப்பிட்டு பேசி வந்தேன். கேஎல் ராகுல் அதையே செய்திருக்கிறார். வாஷிங்டன் சுந்தரிடம் தமிழில் பேசுகிறார் ராகுல். மிதவேகப்பந்துவீச்சாளரைப் போல பந்துவீசுவதாகவும் சற்று மெதுவாகக் காற்றில் தூக்கிவீசி வீச வேண்டும் என்றும் வாஷிங்டனிடம் ராகுல் கூறுகிறார். சொன்னபிறகும், 92 கி.மீ. வேகத்தில் பந்துவீசியிருக்கிறார் வாஷிங்டன் சுந்தர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் பாங்கர்? வாஷிங்டன் சுந்தருடன் இன்னும் கொஞ்சம் தமிழில் பேச வேண்டுமா?" என்று வருண் ஆரோன் கூறினார்.

சஞ்சய் பாங்கர் இதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசுகையில், தேசிய மொழியில் கொஞ்சம் பேசிப் பார்க்கலாம் என்ற தொனியில் பதிலளித்ததாகத் தெரிகிறது. பாங்கரின் இந்தக் கருத்துக்கு உடனடியாக இணையத்தில் எதிர்வினைகள் வரத் தொடங்கின.

ஹிந்தி மொழி தேசிய மொழி கிடையாது என்று சமூக ஊடகங்களில் பதிவுகள் வருகின்றன. சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை மையமாகக் கொண்டு வெளிவந்துள்ள படம் பராசக்தி. இப்படம் சமூக ஊடகங்களில் மிகப் பெரிய அளவில் பேசுபொருளாகி வரும் சூழலில், இந்தப் பிரச்னை எழுந்திருப்பது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Sanjay Bangar | Hindi | National Language | IND v NZ | Virat Kohli | KL Rahul | Washington Sundar |