லமிச்சானே @Sandeep25
விளையாட்டு

லமிச்சானேக்கு விசா வழங்க நேபாளத்துக்கான அமெரிக்க தூதரகம் மறுப்பு!

யோகேஷ் குமார்

நேபாள கிரிக்கெட் வீரரான லமிச்சானேக்கு விசா வழங்க நேபாளத்துக்கான அமெரிக்க தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2022-ல் காத்மண்டுவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 18 வயதுப் பெண்ணை லமிச்சானே பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அச்சமயத்தில் மேற்கிந்தியத் தீவுகளில் சிபிஎல் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த லமிச்சானே உடனடியாக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு இடைக்காலத் தடை விதித்தது நேபாள கிரிக்கெட் வாரியம். இச்சம்பவம் குறித்து மறுப்புத் தெரிவித்திருந்தார் லமிச்சானே. பிறகு நேபாள அணிக்காக சில போட்டிகளில் விளையாடவும் செய்தார்.

இந்நிலையில் லமிச்சானே மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு கடந்த டிச.29 அன்று விசாரணைக்கு வந்தது. லமிச்சானேவைக் குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம், அவருக்கு தண்டனையை அறிவித்தது. அதன்படி, லமிச்சானேவுக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 3 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக லமிச்சானேவின் வழக்கறிஞர் சரோஜ் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கில், சந்தீப் லமிச்சானேவை அந்நாட்டு உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனால் அவர் இனி வழக்கம்போல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான நேபாள அணியில் அவர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நேபாள அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க லமிச்சானேக்கு விசா வழங்க நேபாளத்துக்கான அமெரிக்க தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் அவர் வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிகிறது.

முன்னதாக 2019 சிபிஎல் போட்டியில் பங்கேற்க விசா கோரி லமிச்சானே சென்ற போதும், அவருக்கு விசா வழங்க நேபாளத்துக்கான அமெரிக்க தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.