சாய்னா நேவால் ANI
விளையாட்டு

வினேஷ் போகாட் செய்த தவறு: சாய்னா நேவால் கருத்து

இன்று காலை வினேஷ் போகாட் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.

கிழக்கு நியூஸ்

மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள வினேஷ் போகாட், கூடுதல் எடையை அடைந்தது போன்ற தவறை செய்திருக்கக் கூடாது என்று பிரபல பாட்மிண்டன் வீரர் சாய்னா நேவால் கூறியுள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட் ஜூலை 6 அன்று காலிறுதிக்கு முந்தையச் சுற்று, காலிறுதிச் சுற்று மற்றும் அரையிறுதிச் சுற்றில் அடுத்தடுத்து வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இதைத் தொடர்ந்து இறுதிச் சுற்றுக்கு முன்னதாக 50 கிலோ எடையைக் காட்டிலும் 100 கிராம் அளவில் கூடுதல் எடையில் இருந்ததால், வினேஷ் போகாட் பாரிஸ் ஒலிம்பிக்ஸிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இது குறித்து, “ஏதோவொரு விதத்தில் போகாட் மீதும் தவறு உள்ளது” என்று சாய்னா நேவால் பேட்டி அளித்துள்ளார்.

காயம் காரணமாகக் கடந்த ஒரு வருடமாக எந்தவொரு போட்டியிலும் கலந்துகொள்ளாத சாய்னா நேவால், பாரிஸ் ஒலிம்பிக்ஸிலும் பங்கேற்கவில்லை.

2012 ஒலிம்பிக்ஸில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா நேவால், 2020-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் தகுதி நீக்கம் செய்யப்பட்டு பதக்கம் இழந்த வினேஷ் போகட் பற்றி என்டிடிவி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் சாய்னா நேவால் கூறியதாவது:

வினேஷ் போகாட் அனுபவசாலி. ஏதோவொரு விதத்தில் அவர் மீதும் தவறு உள்ளது. அவரும் பழியை ஏற்றுகொள்ள வேண்டும். இதுபோன்ற முக்கியமான ஆட்டத்தின்போது இத்தகையை தவறுகள் நிகழ்வது சரியல்ல. இது ஏதோ முதல் ஒலிம்பிக்ஸில் அவர் விளையாடவில்லை. மூன்றாவது ஒலிம்பிக்ஸ். அவருக்கு விதிமுறை தெரியும். வினேஷ் போகாட் என்ன தவறு செய்தார் என்று தெரியவில்லை. ஒரு விளையாட்டு வீரராக அவரின் வலியை என்னால் புரிந்துக்கொள்ள முடியும்.

போகாட் கடுமையாக உழைக்கக்கூடியவர். நிச்சயம் அவர் அடுத்த ஒலிம்பிக்ஸில் பதக்கத்தை வெல்வார் எனக் கூறியுள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக, இன்று காலை வினேஷ் போகாட் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.