கோப்புப்படம் ANI
விளையாட்டு

3-0: தென்னாப்பிரிக்காவை நொறுக்கிய பாகிஸ்தான்!

சாதனை வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, கடைசியாக விளையாடிய 5 ஒருநாள் தொடர்களையும் வென்றுள்ளது.

கிழக்கு நியூஸ்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வென்று பாகிஸ்தான் அணி சாதனை படைத்துள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்குப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி, முதல் இரு ஒருநாள் ஆட்டங்களை வென்று தொடரைக் கைப்பற்றியது. ஜொகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 3-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 47 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் குவித்தது.

முதல் ஒருநாள் ஆட்டத்தில் சதமடித்த 22 வயது தொடக்க வீரர் சயிம் அயூப், இந்த ஆட்டத்திலும் சதமடித்து அசத்தினார். சயின் அயூப் 91 பந்துகளில் சதமடித்து 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பாபர் ஆஸம், ரிஸ்வான் அரை சதமடித்து தங்கள் அணி பெரிய ஸ்கோர் பெற உதவினார்கள். மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில், தென்னாப்பிரிக்க அணியால் இலக்கை எட்டமுடியாமல் 42 ஓவர்களில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கிளாசென் அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். அவர் மூன்று ஒருநாள் ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக மூன்று அரை சதங்கள் எடுத்தும் அணி வீரர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காமல் தடுமாறினார்.

இதையடுத்து ஒருநாள் தொடரை 3-0 என வென்றது பாகிஸ்தான் அணி. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை சயிம் அயூப் வென்றார்.

முதல்முறையாக சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை முழுமையாக இழந்துள்ளது தென்னாப்பிரிக்கா. சாதனை வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, கடைசியாக விளையாடிய 5 ஒருநாள் தொடர்களையும் வென்றுள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை நெருங்கி வரும் நிலையில், தென்னாப்பிரிக்க அணியோ, கடைசி 6 ஒருநாள் தொடர்களில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.