பத்ரிநாத் @CricItwithBadri
விளையாட்டு

ருதுராஜ் கெயிக்வாடுக்கு நீதி வேண்டும்: பத்ரிநாத் சாடல்!

இலங்கை தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெயிக்வாடுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

யோகேஷ் குமார்

உடம்பில் டாட்டூ, நடிகைகளுடன் நெருங்கிய நட்பு, கெட்டவன் (bad boy) என்ற பெயர் இருந்தால் தான் இந்திய அணியில் இடம் கிடைக்கும் போல என்று பத்ரிநாத் பேசியுள்ளார்.

இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் பங்கேற்பதற்காக இலங்கைக்குச் செல்கிறது. இத்தொடர் ஜூலை 27 அன்று தொடங்கி ஆகஸ்ட் 7 வரை நடைபெறவுள்ளது.

இதில் ருதுராஜ் கெயிக்வாட் இடம்பெறாதது ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில், ருதுராஜ் தான் விளையாடிய மூன்று ஆட்டங்களில் முறையே 7, 77*, 49 ரன்கள் எடுத்தார்.

கடைசி 7 டி20 ஆட்டங்களில் 71.2 சராசரியுடன் 356 ரன்கள் எடுத்துள்ளார் கெயிக்வாட். எனவே, அவருக்கு கிடைத்த வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்தியும் அணியில் இடம்பெறாதது ஏன்? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பினர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் தனது யூடியூப் சேனலில் பேசியபோது, “ருதுராஜ் கெயிக்வாடுக்கு நீதி வேண்டும்” என்றார்.

அவர் பேசியதாவது:

“இந்திய அணியில் கொடுக்கப்பட்ட அனைத்து வாய்ப்புகளையும் ருதுராஜ் சரியாக பயன்படுத்தி உள்ளார். உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினார். சிஎஸ்கே அணிக்காவும் சிறப்பாக விளையாடினார். அவரை தேர்வு செய்யாததற்கு என்ன காரணம்? ருதுராஜ் கெயிக்வாடுக்கு நீதி வேண்டும். அவரை தேர்வு செய்யாதது மிகப்பெரிய தவறு.

ஒருவேளை உடம்பில் டாட்டூ, நடிகைகளுடன் நெருங்கிய நட்பு, தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள ஒரு மேலாளர், கெட்டவன் (bad boy) என்ற பெயர் இருந்தால் தான் இந்திய அணியில் இடம் கிடைக்கும் போல” என்றார்.