ஸ்லோவேனியா அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற போர்ச்சுகல் அணி, காலிறுதியில் பிரான்ஸை எதிர்கொண்டது.
பிரான்ஸின் கிலியன் எம்பாப்பே - போர்ச்சுகலின் ரொனால்டோ என இரு கால்பந்து ஜாம்பவான்கள் மோதிய இந்த ஆட்டத்தின் முடிவு 0-0 என சமனில் இருந்தது. இதையடுத்து நடைபெற்ற பரபரப்பான பெனால்டி ஷூட் அவுட்டில் 5-3 என வென்ற பிரான்ஸ் அணி, அரையிறுதியில் ஸ்பெயினை எதிர்கொள்ளவுள்ளது.
39 வயது ரொனால்டோவின் ஆறாவது மற்றும் கடைசி யூரோ கோப்பை ஆட்டம் என்பதால் இந்த ஆட்டத்துடன் யூரோ கோப்பைப் போட்டியிலிருந்து மட்டுமல்ல சர்வதேசப் போட்டிகளில் இருந்தும் அவர் விடைபெறுவதாக அறியப்படுகிறது. எனினும் இதுகுறித்து அதிகாரபூர்வமாக ரொனால்டோ தரப்பிலிருந்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
பிரான்ஸ் அணி, கடந்த 26 வருடங்களாக முக்கியமான போட்டிகளின் ஷூட் அவுட்டில் தோல்வியையே கண்டுள்ளது. 1998 உலகக் கோப்பை காலிறுதியில் ஷுட் அவுட் முறையில் இத்தாலியைத் தோற்கடித்த பிறகு இப்போதுதான் பெனால்டியில் அந்த அணி வெற்றியை ருசித்துள்ளது.
மற்றொரு காலிறுதியில் ஸ்பெயின் அணி, போட்டியை நடத்தும் ஜெர்மனியை 2-1 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. ஆட்டத்தின் முடிவில் 1-1 என இருந்தபோதும் கூடுதல் நேரத்தில், 119-வது நிமிடத்தில் அடித்த கோலால் ஸ்பெயின் அணிக்கு வெற்றி கிடைத்தது.