ஆஸ்திரேலிய ஏ அணியுடனான 3 ஒருநாள் ஆட்டங்களில் இந்திய ஏ அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி இடம்பெறுவது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்குப் பயணம் செய்யும் ஆஸ்திரேலிய ஏ அணி இரு நான்கு நாள் ஆட்டங்கள் மற்றும் மூன்று ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செப்டம்பர் 30, அக்டோபர் 3, அக்டோபர் 5 ஆகிய நாள்களில் ஒருநாள் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
சர்வதேச டி20 மற்றும் டெஸ்டிலிருந்து ஓய்வுபெற்றுள்ள ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடவுள்ளார்கள். இருவரும் அண்மையில் உடற்தகுதிக்கான பரிசோதனையில் பங்கெடுத்து தேர்ச்சி பெற்றார்கள்.
இந்திய அணி அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்து 3 ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த ஒருநாள் தொடருக்கு முன்பு ரோஹித் சர்மா, விராட் கோலி விளையாடுவதற்கான வாய்ப்பு இல்லை.
எனவே, இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய ஏ அணியுடனான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி பங்கெடுப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக என்ற கேள்விகள் எழத் தொடங்கின.
பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
"இந்திய ஏ அணி விளையாடும் ஆட்டங்களில் ரோஹித் சர்மா, விராட் கோலி இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அவர்கள் கட்டாயப்படுத்தவும் மாட்டார்கள். அவர்கள் ஆட்டத்தில் விளையாட வேண்டும் என நினைத்தால், ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கு முன்பு ஆஸ்திரேலிய ஏ தொடரில் ஒன்றிரண்டு ஆட்டங்களில் அவர்கள் விளையாடலாம். ஆனால் எதுவும் இறுதி செய்யப்படவில்லை. அவர்கள் முழு உடற்தகுதியுடன் உள்ளார்கள். ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடரில் விளையாடத் தயாராக இருக்கிறார்கள்" என்றார் அவர்.
பெங்களூருவிலுள்ள பிசிசிஐ மையத்தில் ரோஹித் சர்மா உடற்தகுதித் தேர்வை மேற்கொண்டார். விராட் கோலி லண்டனிலிருந்தபடியே இதைச் செய்து முடித்தார்.
"இவை வழக்கமான உடற்தகுதி பரிசோதனைகள் தான். பிசிசிஐயுடன் ஒப்பந்தம் செய்துள்ள வீரர்கள் அனைவரும் ஆண்டுக்கு இருமுறை உடற்தகுதி பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இதில் வழக்கத்துக்கு மாறானது என எதுவும் இல்லை" என்றும் பிசிசிஐ அதிகாரி தெரிவித்தார்.
Rohit Sharma | Virat Kohli | India A | Australia A | India tour of Australia | BCCI |