ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் பெர்த்தில் நவம்பர் 22 அன்று தொடங்குகிறது. இரண்டாவது குழந்தை காரணமாக முதல் டெஸ்டில் ரோஹித் சர்மா பங்கேற்பது சந்தேகமாகவே இருந்தது. இந்த நிலையில் ரோஹித் சர்மா - ரித்திகா தம்பதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரண்டாவது குழந்தை பிறந்தது.
பெர்த் டெஸ்டுக்கு ஒரு வாரம் முன்னதாக குழந்தை பிறந்துவிட்டதால், ரோஹித் சர்மா இந்திய அணியுடன் விரைவில் இணைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே கருதப்பட்டது.
எனினும், மனைவியுடன் கூடுதல் நேரம் செலவிட வேண்டியுள்ளது என பிசிசிஐயிடம் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. எனவே, பெர்த் டெஸ்டில் இந்திய அணியை ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்தவுள்ளார்.
அடிலெய்ட் பகலிரவு டெஸ்டுக்கு முன்பு ஆஸ்திரேலிய பிரதமர் XI-க்கு எதிராக இரு நாள்கள் பகலிரவு பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடுகிறது. நவம்பர் 30 அன்று இந்த ஆட்டம் தொடங்குகிறது. இந்தப் பயிற்சி ஆட்டத்தில் ரோஹித் சர்மா பங்கேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியில் மாற்று தொடக்க பேட்டராக அபிமன்யு ஈஸ்வரன் உள்ளார். ரோஹித் சர்மா இல்லாத பட்சத்தில் அவருடைய இடத்தில் அபிமன்யு ஈஸ்வரன் களமிறங்கலாம். அதே வேளையில், கேஎல் ராகுலும் மேல் வரிசையில் களமிறக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே பார்க்கப்பட்டது. ஆனால், பயிற்சி ஆட்டத்தில் ஃபீல்டிங் செய்தபோது, ஷுப்மன் கில் கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. எலும்பு முறிவிலிருந்து ஷுப்மன் கில் குணமடைய இரு வாரங்கள் ஆகும் என்பதால், இவரும் பெர்த் டெஸ்டில் விளையாடவில்லை.
எனவே, அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் கேஎல் ராகுல் என இருவருமே முதல் டெஸ்டில் களமிறங்கலாம். மேலும், ஆஸ்திரேலிய ஏ தொடரில் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய தேவ்தத் படிக்கல், ஆஸ்திரேலியாவில் தங்கவைக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. முதல் டெஸ்டில் ரோஹித் சர்மாவுக்குப் பதில் இவர் இந்திய அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா ஏ-வுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஜுரெலும் அணித் தேர்வில் கவனிக்கத்தக்கவராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரோஹித் சர்மா இல்லாததால், அணியை வழிநடத்துவது பும்ரா என்பது மட்டும் தற்போதைய நிலையில் உறுதியாகியுள்ளது. ரோஹித் சர்மாவுக்கு மாற்று பேட்டர்கள் யார் என்பது வரும் காலங்களில் தெரியவரும்.