2023 உலகக் கோப்பை இறுதிச் சுற்று தோல்விக்குப் பிறகு தான் எதிர்கொண்ட அனுபவத்தை ரோஹித் சர்மா மனம் திறந்து பேசியுள்ளார்.
2023 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அரையிறுதி வரை எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது. அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து உலகக் கோப்பை கனவை இழந்தது இந்தியா. கேப்டன் ரோஹித் சர்மா, இந்தப் போட்டியில் அட்டகாசமாக விளையாடிய மூத்த வீரர் விராட் கோலி உள்ளிட்டோர் மனமுடைந்து போனார்கள். பிறகு, 2024-ல் டி20 உலகக் கோப்பையை வென்று ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆறுதல் அளித்தது.
இருந்தபோதிலும், 2023 உலகக் கோப்பை இறுதிச் சுற்று ஏற்படுத்திய தாக்கம் சொல்லில் அடங்காது. அது வீரர்களுக்கும் சரி, ரசிகர்களுக்கும் சரி. இந்நிலையில் தான் 2023 உலகக் கோப்பை இறுதிச் சுற்று தோல்விக்குப் பிறகு, தான் எதிர்கொண்ட சூழலை அவர் விளக்கியுள்ளார்.
குருகிராமில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் பேசியதாவது:
"2023 உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்குப் பிறகு நான் முற்றிலுமாக நிலைகுலைந்து போனேன். இந்த விளையாட்டை இனி விளையாடவே வேண்டாம் என்று தோன்றியது. காரணம், என்னுள் இருந்த எல்லாவற்றையும் அது எடுத்துக்கொண்டது. என்னிடம் மீதம் எதுவும் இல்லை.
எனக்கு சற்று நேரம் எடுத்தது. களத்தில் மீண்டும் செயல்பட, இழந்த சக்தியை மெதுமெதுவாக மீட்டெடுத்தேன்.
எல்லோரும் மிகுந்த ஏமாற்றமடைந்தார்கள். என்ன நடந்தது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. தனிப்பட்ட முறையில் அது எனக்கு மிகக் கடினமான காலம். காரணம், அந்த உலகக் கோப்பைக்காக நான் எல்லாவற்றையும் அர்ப்பணித்துள்ளேன். அதுவும் வெறும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு அல்ல. 2022-ல் கேப்டனாக பொறுப்பேற்றதிலிருந்து இதற்காகவே நான் எல்லாவற்றையும் அர்ப்பணித்தேன். உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது தான் என் ஒரே இலக்கு. அது டி20 உலகக் கோப்பை அல்லது 2023 உலகக் கோப்பை. அது நடக்காதபோது நான் நொறுங்கிப்போனேன். என் உடலில் எந்தச் சக்தியும் இல்லை. இதிலிருந்து மீண்டு வர எனக்கு சில மாதங்கள் தேவைப்பட்டன.
ஒரு விஷயத்துக்காக எல்லாவற்றையும் செய்துவிட்டு, அதற்கான முடிவை அடைய முடியாதபோது இது மாதிரியான உணர்வு இயல்பானது தான். அது தான் எனக்கும் நடந்தது. வாழ்க்கை அங்கேயே முடிந்துவிடாது என்பதும் எனக்குத் தெரியும். ஏமாற்றத்தை எப்படிக் கையாள வேண்டும், மீண்டெழ வேண்டும் என்பதற்கான மிகப் பெரிய பாடம் அது.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் 2024 டி20 உலகக் கோப்பை வருகிறது. என் முழுக் கவனத்தையும் அதில் செலுத்த வேண்டியிருந்தது. சொல்வதற்கு அது தற்போது மிக எளிதாக இருக்கிறது. ஆனால், அந்த நேரத்தில் அது மிகக் கடினம்" என்றார் ரோஹித் சர்மா.
Rohit Sharma opens up on his Heart Break moment on 2023 World Cup Final Loss at the the Master's Union Convocation 2025, in Gurugram on Sunday.
2023 World Cup | Rohit Sharma |