ANI
விளையாட்டு

எனக்கு இந்த அணியைப் பிடிக்கும், இந்த அணியுடன் விளையாடப் பிடிக்கும்: ரோஹித் சர்மா | Rohit Sharma |

"ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒவ்வொரு முறை விளையாடும்போதும்..."

கிழக்கு நியூஸ்

ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் இடம்பெற்றுள்ள ரோஹித் சர்மா, சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

சியட் கிரிக்கெட் ரேடிங் விருதுகள் வழங்கும் மும்பையில் நடைபெற்றது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா இதில் கலந்துகொண்டு பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசினார். சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற அவரிடமிருந்து கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டு, ஷுப்மன் கில் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும், மூத்த வீரராக இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார் ரோஹித் சர்மா.

சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது குறித்தும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இடம்பெற்றுள்ளது குறித்தும் ரோஹித் சர்மா கூறியதாவது:

"எனக்கு இந்த அணியைப் பிடிக்கும். இந்த அணியுடன் விளையாடப் பிடிக்கும். நாங்கள் பல ஆண்டுகளாக மேற்கொண்ட பயணம் அது. வெறும், ஓரிரு ஆண்டுகளில் செலுத்தப்பட்ட உழைப்பு அல்ல. பல ஆண்டுகளாகச் செலுத்தி வந்த உழைப்பு.

கோப்பையை வெல்ல பல முறை மிக அருகே வந்து தோல்வியடைந்துள்ளோம். அப்போது தான், கோப்பையை வெல்ல வேறு ஏதேனும் ஒன்றை நாம் செய்ய வேண்டியிருக்கிறது என்று முடிவு செய்தோம்.

இதில் இரண்டு கோணங்கள் உள்ளன. முதலாவது, ஒன்றைச் செய்ய வேண்டும் என எப்போதும் நினைப்பது. மற்றொன்று, நினைத்ததை அப்படியே செய்து முடிப்பது. ஓரிரு வீரர்களால் மட்டும் இதைச் செய்துவிட முடியாது. எல்லோரும் இந்தச் சிந்தனைக்குள் வர வேண்டும். எல்லோரும் இந்தச் சிந்தனைக்குள் வந்தது நல்ல விஷயம்.

சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் அனைவரும் ஆட்டத்தில் எப்படி வெற்றி பெற வேண்டும், நம்மை நாமே எப்படி சவாலுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும், எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற சிந்தனை ஓட்டத்துக்குள் சென்றுவிட்டார்கள்.

இந்தத் திறன்களை தான் அணிக்குள் கொண்டு வர முயற்சித்தோம். இது தான் சரியான வழி என்றும் நினைத்தோம். எல்லோரும் இந்த நடைமுறையை மகிழ்வுடன் அனுபவித்தார்கள். முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிறகு, அதை அப்படியே தூக்கி ஓரம் வைத்துவிட்டு, அடுத்த ஆட்டத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினோம்.

அணியிடமிருந்து உண்மையில் இது நன்றாக கிடைக்கப் பெற்றது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு நானும் ராகுல் டிராவிடும் திட்டமிடுவதற்கு இது எங்களுக்கு உதவியது. அப்படியே சாம்பியன்ஸ் கோப்பைக்கும் தான். அதை அப்படி சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிக்கும் கடத்திச் சென்றோம்" என்றார் ரோஹித் சர்மா.

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளது குறித்தும் அவரிடம் கேட்கப்பட்டது.

ரோஹித் சர்மா கூறுகையில், "ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடப் பிடிக்கும். ஆஸ்திரேலியா செல்ல பிடிக்கும். கிரிக்கெட் விளையாடுவதற்கு மிகவும் சவாலளிக்கக்கூடிய நாடு ஆஸ்திரேலியா. அங்குள்ள மக்களும் கிரிக்கெட்டை விரும்பக்கூடியவர்கள்.

ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒவ்வொரு முறை விளையாடும்போதும் வெவ்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடும். பல முறை ஆஸ்திரேலியா சென்றுள்ளதால், அங்கு எதை எதிர்பார்க்க வேண்டும் எனத் தெரியும். இந்திய அணி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து வெற்றி பெறுவோம் என நம்புகிறேன்" என்றார் ரோஹித் சர்மா.

Rohit Sharma | BCCI | Team India | India Squad | India tour of Australia |