இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உடற்தகுதிக்கான யோ-யோ தேர்வை எதிர்கொள்வதற்காக பெங்களூரு சென்றடைந்துள்ளார்.
ஆசியக் கோப்பைப் போட்டி செப்டம்பர் 9 அன்று தொடங்கவுள்ளது. இதற்கு முன்னதாக, பெங்களூருவிலுள்ள பிசிசிஐ மையத்தில் வீரர்களுக்கான உடற்தகுதித் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்காக ஷுப்மன் கில், ஜஸ்பிரித் பும்ரா, ஷார்துல் தாக்குர் உள்ளிட்ட வீரர்கள் சனிக்கிழமை பெங்களூரு சென்றடைந்தார்கள்.
ஆசியக் கோப்பைக்கான அணியில் இல்லாத ஒருநாள் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, வேகப்பந்துவீச்சாளர் முஹமது சிராஜ் ஆகியோரும் பெங்களூரு சென்றடைந்துள்ளார்கள். ஜிதேஷ் சர்மா கடந்த மூன்று நாள்களாக இங்கு தான் உள்ளார்.
பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஒரு பருவம் தொடங்குவதற்கு முன்பு எல்லா வீரர்களும் உடற்தகுதித் தேர்வை மேற்கொள்ள வேண்டும். ஒப்பந்தத்தின்படி, இது கட்டாயம். உடற்தகுதியில் வீரர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள், எதில் அவர்கள் மேம்பட வேண்டும், எதில் பின்தங்கியுள்ளார்கள் என்பது குறித்து பிசிசிஐ மையம் அறிய இது உதவுகிறது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்குப் பிறகு நீண்ட இடைவெளி இருந்ததால், வீரர்கள் வீட்டிலிருந்தபடியே சில உடற்பயிற்சிகளைச் செய்ய அறிவுறுத்தப்பட்டார்கள்" என்றார்.
இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா ஆகியோர் ஏற்கெனவே உடற்தகுதித் தேர்வில் பங்கெடுத்துவிட்டார்கள். ரோஹித் சர்மா (38) மற்றும் விராட் கோலி (36) ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடவுள்ளார்கள். இவர்களுடைய எதிர்காலம் குறித்து இன்னும் உறுதிபடத் தெரியவில்லை. இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இவர்களில் ரோஹித் சர்மா மட்டும் தற்போது உடற்பயிற்சிக்கான யோ-யோ தேர்வை எதிர்கொள்ளவுள்ளார். டெஸ்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு முதல்முறையாக உடற்பயிற்சிக்கானத் தேர்வை எதிர்கொள்கிறார் ரோஹித் சர்மா. விராட் கோலி உடற்பயிற்சிக்கானத் தேர்வை எப்போது எதிர்கொள்வார் என்பது குறித்து தகவல் இல்லை.
அண்மையில், அபிஷேக் நாயருடன் இணைந்து ரோஹித் சர்மா உடற்பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.
Rohit Sharma | Virat Kohli | Yo-Yo Test | BCCI | BCCI Centre of Excellence |