விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் சதமடித்து கலக்கியுள்ளார்கள்.
விஜய் ஹசாரே கோப்பைப் போட்டி இன்று தொடங்கியது. எலைட் பிரிவில் இடம்பெற்றுள்ள மும்பை அணி ஜெய்ப்பூரில் இன்று சிக்கிமை எதிர்கொண்டது. ரோஹித் சர்மா விளையாடுவதால், இந்த ஆட்டத்தைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினார்கள். விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியைக் காண இந்தளவுக்கு ரசிகர்கள் கூடியது கிரிக்கெட்டில் நட்சத்திரங்களின் வலிமையை உணர்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த சிக்கிம் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் விக்கெட் கீப்பர் ஆஷிஷ் தாபா 87 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். மும்பை அணியில் அதிகபட்சமாக ஷார்துல் தாக்குர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மும்பை தொடக்க பேட்டர்களாக அங்ரிஷ் ரகுவன்ஷி மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினார்கள். ரகுவன்ஷி 58 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 9 சிக்ஸர்கள், 18 பவுண்டரிகள் உள்பட 155 ரன்கள் விளாசினார். இவர் தனது சதத்தை வெறும் 62 பந்துகளில் அடித்து ரசிகர்கள் குஷிப்படுத்தினார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் 37-வது சதம். அதேசமயம், இதுவே அவருடைய அதிவேக சதம்.
இதன்மூலம், 30.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 237 ரன்கள் எடுத்த மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. முஷீர் கான் ஆட்டமிழக்காமல் 27 ரன்கள் எடுத்தார். இவருடைய மூத்த சகோதரர் சர்ஃபராஸ் கான் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்டநாயகன் விருதை ரோஹித் சர்மா வென்றார்.
பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் தில்லி அணி ஆந்திரத்தை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆந்திரம் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது. ரிக் புய் 105 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து அசத்தினார். தில்லியில் சிமர்ஜீத் சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலக்கை விரட்டி களமிறங்கிய தில்லி அணியில் தொடக்க பேட்டர் அர்பித் ராணா டக் அவுட் ஆனார். இதனால், முதல் ஓவரிலேயே விராட் கோலி களமிறங்க நேரிட்டது. மற்றொரு தொடக்க பேட்டர் பிரியன்ஷ் ஆர்யா அதிரடியாக விளையாடி 44 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். இவர் ஆட்டமிழந்தவுடன் நிதிஷ் ராணா 55 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இவர்கள் இருவரையும் மிஞ்சும் அளவுக்கு விராட் கோலி 101 பந்துகளில் 131 ரன்கள் எடுத்து அதகளப்படுத்தினார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் கோலி அடிக்கும் 58-வது சதம் இது. மேலும், சதமடித்ததன் மூலம், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 16 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார் கோலி. சச்சின் டெண்டுல்கர் இந்த மைல்கல்லை 330-வது இன்னிங்ஸில் அடைந்ததே சாதனையாக இருந்தது. கோலி இதை 61 இன்னிங்ஸ் குறைவாக அடைந்து சச்சின் சாதனையை முறியடித்துள்ளார்.
இதன்மூலம், 37.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது தில்லி அணி. முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சிமர்ஜீத் சிங் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய ஒருநாள் அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் இடம் குறித்து அவ்வப்போது கேள்வி எழுந்து வரும். ஆனால், மற்ற எல்லா வீரர்களை விடவும் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்டர்களுக்கான தரவரிசையில் இவர்கள் தான் முதலிரு இடங்களைத் தக்கவைத்துள்ளார்கள். உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலும் வீரர்கள் விளையாட வேண்டும் என்ற நிபந்தனைக்கு ஏற்ப ரோஹித் மற்றும் கோலி விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் பங்கேற்றுள்ளார்கள். ரோஹித் சர்மா 2018-க்குப் பிறகு விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் விளையாடுகிறார். விராட் கோலி 2010-க்குப் பிறகு இப்போட்டியில் விளையாடுகிறார். இளம் பந்துவீச்சாளர்களை மிகச் சுலபமாக எதிர்கொண்டு இருவரும் சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார்கள்.
Rohit Sharma | Virat Kohli | Vijay Hazare Trophy |