ரோஹித் சர்மா 
விளையாட்டு

இந்திய வீரர்களுக்கு இம்பாக்ட் விதி உதவுவதில்லை: ரோஹித் சர்மா

யோகேஷ் குமார்

இம்பாக்ட் விதியில் தனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை என மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டியளித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியில் பயன்படுத்தப்பட்டு வரும் இம்பாக்ட் விதி, இந்திய வீரர்களுக்கு உதவுவதில்லை என்பதால் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியதாவது:

“கிரிக்கெட் 11 வீரர்களைக் கொண்டு விளையாடப்படும் விளையாட்டு, 12 வீரர்கள் கொண்டது அல்ல. இம்பாக்ட் விதியில் எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு பொழுதுபோக்காக அது இருக்குமே தவிர வீரர்களுக்கு உதவாது. உதாரணத்திற்கு துபே மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இதனால் பந்துவீச முடியவில்லை.

இது இந்திய அணிக்கு நல்லது கிடையாது. ஆட்டத்தின் சூழலைப் புரிந்துக்கொண்டு அதன் பிறகு வீரரை மாற்றினால் பரவாயில்லை. ஒரு அணியால் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை என்றால் அப்போது ஒரு வீரரை இம்பாக்ட் வீரராக கொண்டு வருவதில் அர்த்தம் உண்டு.

ஏற்கெனவே ஒரு ஆடுகளத்தில் அனைவரும் பேட்டிங் சிறப்பாக செய்யும் சூழலில், ஒரு பந்துவீச்சாளரை அணியில் இம்பாக்ட் வீரராகச் சேர்க்கலாம். மீண்டும் அங்கு இன்னொரு பேட்டரை கொண்டு வந்து அதிகமான ரன்களை அடிக்க வைப்பதில் எந்தப் பலனும் இல்லை” என்றார்.