ANI
விளையாட்டு

பிஎஃப் சர்ச்சை: ராபின் உத்தப்பா மறுப்பு!

"தான் எந்தவொரு நிர்வாகப் பொறுப்பிலும் இல்லை, நிறுவனங்களின் அன்றாடச் செயல்பாடுகளில் தான் தலையிடுவதும் இல்லை."

கிழக்கு நியூஸ்

வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) முறைகேடு வழக்கில் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபல கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா அதுதொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த சென்டாரஸ் லைஃப்ஸ்டைல் பிராண்ட்ஸ் லிமிடெட் நிறுவனம், ஊழியர்களின் ஊதியத்தில் வருங்கால வைப்பு நிதிக்குப் பிடித்தம் செய்துள்ளது. ஆனால், பிடித்தம் செய்த தொகையை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் செலுத்தவில்லை என்பது புகார். இந்த நிறுவனத்தின் இயக்குநர் என்பதன் அடிப்படையில் உத்தப்பா மீது கைது ஆணையைப் பிறப்பித்து பிஎஃப் மண்டல ஆணையர் உத்தரவிட்டார்.

டிசம்பர் 4 அன்று கைது இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புலகேஷிநகர் காவல் நிலையத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிஎஃப் மண்டல ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

டிசம்பர் 27 வரை அவகாசம் உள்ளது. அதற்குள் செலுத்த வேண்டிய ரூ. 23.36 லட்சத்தை செலுத்த வேண்டும். இல்லையெனில், உத்தப்பா கைது ஆணையை எதிர்கொள்ள வேண்டும் என்கிற நிலை உள்ளது.

இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள ராபின் உத்தப்பா, தான் நிதியுதவி அளித்த மூன்று நிறுவனங்களிலும் தன்னுடையத் தலையீடு குறித்து தெளிவுபடுத்தியுள்ளார். இந்த நிறுவனங்களில், தான் எந்தவொரு நிர்வாகப் பொறுப்பிலும் இல்லை, நிறுவனங்களின் அன்றாடச் செயல்பாடுகளில் தான் தலையிடுவதும் இல்லை என்று உத்தப்பா கூறியுள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்பே, நிறுவனங்களின் இயக்குநர் பொறுப்பிலிருந்து தான் ராஜினாமா செய்துவிட்டதாகவும் உத்தப்பா விளக்கமளித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் தான் எந்தப் பொறுப்பையும் வகிக்கவில்லை என தன் தரப்பு சட்டநிபுணர்கள் பதிலளித்தும், பிஎஃப் அதிகாரிகள் நடவடிக்கையைத் தொடர்ந்துள்ளார்கள். வரும் நாள்களில் இதைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உத்தப்பா கூறியுள்ளார்.