ANI
விளையாட்டு

முதல் 3 ஆட்டங்களுக்கு ரியான் பராக் கேப்டன்: சஞ்சு சாம்சன்

மூன்று ஆட்டங்களில் சஞ்சு சாம்சன் வெறும் பேட்டராக மட்டுமே களமிறங்கவுள்ளார்.

கிழக்கு நியூஸ்

ஐபிஎல் போட்டியில் முதல் மூன்று ஆட்டங்களுக்கு ராஜஸ்தான் ராயல்ஸை ரியான் பராக் வழிநடத்துவார் என அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அறிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் கடைசி டி20யில் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து சஞ்சு சாம்சனின் கைகளைத் தாக்கியது. இதில் சஞ்சு சாம்சனின் விரலில் காயம் ஏற்பட்டது. இந்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சனுக்குப் பதில் துருவ் ஜுரெல் கீப்பிங் செய்தார்.

பெங்களூருவில் இருந்தபடி காயத்திலிருந்து குணமடைந்து வந்த சஞ்சு சாம்சன் கடந்த திங்கள்கிழமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இணைந்தார்.

இந்நிலையில் விரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக முதல் மூன்று ஆட்டங்களில் சஞ்சு சாம்சன் வெறும் பேட்டராக மட்டுமே களமிறங்கவுள்ளார். இவருக்குப் பதில் ரியான் பராக் அணியை வழிநடத்தவுள்ளார். இம்பாக்ட் வீரர் முறையில் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்வார். துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பிங் செய்வார்.

இதுதொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் வெளியிட்ட காணொளியில் சஞ்சு சாம்சன் கூறியதாவது:

"முதல் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட ஆட்டங்களில் நான் முழு உடற்தகுதியுடன் இருக்க மாட்டேன். இந்த அணியில் தலைமைப் பண்பு உடைய பலர் உள்ளீர்கள். கடந்த சில ஆண்டுகளாக, இங்குள்ள சூழலைப் அற்புதமாகப் பார்த்துக்கொள்கிறீர்கள். ஆனால், மூன்று ஆட்டங்களுக்கு ரியான் பராக் தான் அணியை வழிநடத்தப்போகிறார். அணியை வழிநடத்தக்கூடிய திறன் கொண்டவர் ரியான் பராக். அனைவரும் அவருடன் துணை நின்று ஆதரவாக இருக்க வேண்டும்" என்றார் சஞ்சு சாம்சன்.

ஐபிஎல் 2025 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை மார்ச் 23 அன்று எதிர்கொள்கிறது. இதைத் தொடர்ந்து குவஹாத்தியில் நடைபெறும் ஆட்டங்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை மார்ச் 26 அன்றும் சென்னை சூப்பர் கிங்ஸை மார்ச் 30 அன்றும் எதிர்கொள்கிறது.

ரியான் பராக் டி20 கிரிக்கெட்டில் அஸ்ஸாம் அணியை வழிநடத்தியுள்ளார். இவருடையத் தலைமையில் 17 ஆட்டங்களில் 10-ல் அஸ்ஸாம் வெற்றி கண்டுள்ளது.