ரியான் பராக் ANI
விளையாட்டு

அதிக ரன்கள்: ரியான் பராக் முதலிடம்!

யோகேஷ் குமார்

நடப்பு ஐபிஎல் பருவத்தில் 14 ஆட்டங்கள் முடிந்த நிலையில் ராஜஸ்தான் அணி வீரரான ரியான் பராக் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

வழக்கமாக கடைசி நிலையில் களமிறங்கும் பராக் இந்தாண்டு முன்கூட்டியே வந்து விளையாடுகிறார்.

நேற்று மும்பைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பராக் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 39 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி ராஜஸ்தான் அணி வெற்றி பெற முக்கியக் காரணமாக இருந்தார். இந்நிலையில் பராக் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலியுடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார். இதுவரை 3 ஆட்டங்களில் 181 ரன்கள் அடித்துள்ளார்.

லக்னௌ அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 29 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடிய பராக் 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 45 பந்துகளில் 84 ரன்கள் அடித்தார். இதன் பிறகு நேற்று மும்பைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பராக் 54 ரன்கள் எடுத்தார். முன்வரிசையில் விளையாட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டார் பராக்.

ரசிகர்கள் பலரும் இன்று அவரைப் பாராட்டலாம், ஆனால் கடந்த காலங்களில் பராக் சந்திக்காத விமர்சனங்களே கிடையாது. அவரின் மோசமான பேட்டிங் காரணத்தால் ராஜஸ்தான் அணியின் ரசிகர்களே அவரை கேலி செய்தனர். இன்று தனது அதிரடியான ஆட்டத்தால் அவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பராக்.

கடந்த ஐபிஎல் போட்டிகளில் பராக்:

2023 - 7 ஆட்டங்களில் 78 ரன்கள்

2022 - 17 ஆட்டங்களில் 183 ரன்கள்

2021 - 11 ஆட்டங்களில் 93 ரன்கள்

2020 - 12 ஆட்டங்களில் 86 ரன்கள்