இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் நடுவரின் முடிவுக்கு உடன்படாததால், இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்துக்கு ஐசிசியால் 1 அபராதப் புள்ளி விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் லீட்ஸில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 471 ரன்களும் இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. 6 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா 364 ரன்களுக்கு ஆட்டமிழந்து 371 ரன்களை இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 4-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து விக்கெட்டை இழக்காமல் 21 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த டெஸ்டில் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் 61-வது ஓவரின்போது ஹாரி புரூக் மற்றும் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்து வந்தார்கள். அந்நேரத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த பந்தில் இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு உடன்பாடு இல்லை எனத் தெரிகிறது. அப்போது கள நடுவரிடம் பந்தைக் காண்பித்து ஆலோசனை நடத்தி வந்தார் ரிஷப் பந்த். பந்தை மாற்றுவது குறித்த உரையாடல் என்பது அவர்களுடைய உடல்மொழியில் தெரிந்தது.
கள நடுவர் பந்தை மாற்றுவது குறித்து பரிசீலித்தார். பிறகு, பரிசோதனைக்குப் பிறகு பந்து சரியான அளவீடுகளில் பொருந்துவதாகக் கூறி அதை மாற்ற நடுவர் மறுத்ததாகத் தெரிகிறது. இதனால், ரிஷப் பந்த் விரக்தியடைந்தார். விரக்தியில் கையிலிருந்த பந்தை ரிஷப் பந்த் வீசியெறிந்தார்.
ஐசிசி விதிப்படி ரிஷப் பந்த் செய்த செயல் முதல் நிலை குற்றம். நடுவரின் முடிவுக்கு உடன்படாத விதிமீறலுக்காக அவருக்கு ஒரு அபராதப் புள்ளி விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மாதங்களில் பந்த் செய்யும் முதல் தவறு இது. ரிஷப் பந்த் தனது தவறை ஒப்புக்கொண்டார். இதனால், மேற்கொண்டு விசாரணை நடத்தப்படவில்லை.