பாண்டிங் 
விளையாட்டு

சச்சினின் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்?: பாண்டிங்கின் பதில் இதுதான்!

யோகேஷ் குமார்

சச்சினின் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பார் என்று ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் முதலிடத்தில் உள்ளார்.

இவர், 200 டெஸ்டில், 51 சதம் உட்பட 15,921 ரன்கள் எடுத்துள்ளார். இந்த வரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 7-வது இடத்தில் உள்ளார்.

143 டெஸ்டில், 32 சதம் உட்பட 12,027 ரன்கள் எடுத்துள்ளார்.

பாண்டிங் (13,378 ரன்கள்), காலிஸ் (13,289 ரன்கள்), டிராவிட் (13,288 ரன்கள்), குக் (12,472 ரன்கள்), குமார் சங்கக்காரா (12,400 ரன்கள்) ஆகியோர் முறையே 2 முதல் 6-வது இடங்களில் உள்ளனர்.

இதில், ஜோ ரூட் மட்டுமே தற்போது விளையாடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு வயது 33.

இந்நிலையில், “ஜோ ரூட்டிடம் ரன்களை குவிப்பதற்கான பசி இருக்கும் பட்சத்தில், அவர் சச்சினின் சாதனையை முறியடிப்பார்” என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

ஐசிசி-க்கு அளித்த பேட்டியில், “ரூட்டுக்கு 33 வயது தான் ஆகிறது. சச்சினின் சாதனையை முறியடிக்க 3000 ரன்கள் மட்டுமே பின்தங்கி உள்ளார். ஆண்டுக்கு 10-14 டெஸ்டுகள் விளையாடி சராசரியாக 800-1000 ரன்களை குவித்தால் மூன்று முதல் நான்கு ஆண்டுக்குள் இந்த சாதனையை அவர் முறியடிப்பார்.

ஜோ ரூட்டிடம் ரன்களை குவிப்பதற்கான பசி இருக்கும் பட்சத்தில், அவர் சச்சினின் சாதனையை முறியடிப்பார். கடந்த 2 ஆண்டுகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

30 வயதில் பெரும்பாலான வீரர்கள் தங்களின் சிறந்த நிலையை எட்டுவார்கள். அதனை ஜோ ரூட்டும் செய்துள்ளார்.

4-5 ஆண்டுகளுக்கு முன்பு அரைசதம் அடித்தப் பிறகு அதனை சதமாக மாற்ற சிரமப்பட்டார். ஆனால், தற்போது அரைசதம் அடித்தப் பிறகு அதனை பெரிய சதமாக மாற்றுகிறார்” என்றார்.