வெற்றிக் கொண்டாட்ட கூட்டநெரிசல் உயிரிழப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, ஆர்சிபி கேர்ஸ் எனும் முன்னெடுப்பு புதிதாக உருவாகி வருவதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அறிவித்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த ஜூன் மாதம் ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக கோப்பை வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஜூன் 4 அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் பங்கேற்க லட்சக்கணக்கான ரசிகர்கள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தின் வெளியே கூடியதால், கடுமையான கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் உயிரிழந்தார்கள், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். பாராட்டு விழா ஏற்பாடுகளை நிர்வகித்த டிஎன்ஏ (DNA) நிறுவனம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றின் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடைசியாக ஜூன் 5 அன்று இன்ஸ்டகிராம் பக்கத்தில் அறிவிப்பொன்றை வெளியிட்டது. துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்த 11 பேருடைய குடும்பத்தினருக்கும் தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்தது.
மேலும், காயமடைந்த ரசிகர்களுக்கு உதவும் வகையில் ஆர்சிபி கேர்ஸ் எனும் நிதி சார்ந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளதாகவும் ஆர்சிபி அறிவித்தது. ஜூன் 5-க்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் எதுவும் பதிவேற்றம் செய்யப்படவில்லை. மௌனத்தைக் கலைக்கும் விதமாக இன்ஸ்டகிராமில் இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆர்சிபி நிர்வாகம்.
"கடைசியாக இங்கு பதிவிட்டு 3 மாதங்களாகிறது. முன்பு ஆற்றல், நினைவுகள் மற்றும் நீங்கள் பெரிதும் ரசித்த தருணங்களால் இந்தப் பக்கம் நிரம்பியிருந்தது. ஆனால், ஜூன் 4 எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.
மெதுவாக, நாங்கள் உறுதியாக நம்பும் ஒன்றைப் புதிதாகக் கட்டமைத்தோம். அப்படி தான் ஆர்சிபி கேர்ஸ் உயிர் பெற்றது. கௌரவிக்க, ஆற்றுப்படுத்த, துணை நிற்க வேண்டிய தேவையின் அடிப்படையில் இது உருவானது.
இந்தத் தளத்தில் இன்று கொண்டாட்டத்துக்காக வரவில்லை. அக்கறையுடன் வந்துள்ளோம். என்றும் ஆர்சிபி கேர்ஸ்" என்று ஆர்சிபி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் ஆர்சிபி நிர்வாகம் சார்பில் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Royal Challengers Bengaluru | RCB | IPL | Chinnaswamy Stadium | RCB Cares