ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாகப் பிரபல வீரர் ஆர். அஸ்வின் கூறியுள்ளார்.
2009 முதல் 2025 வரை 221 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 187 விக்கெட்டுகள் எடுத்துள்ள அஸ்வின் அப்போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களின் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளார்.
சமீபத்தில் டெஸ்ட் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அஸ்வின் அறிவித்தார். தற்போது ஐபிஎல் ஓய்வுக்குப் பிறகு சர்வதேச லீக் போட்டிகளில் விளையாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் 2009 முதல் 2015 வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அஸ்வின் - 2010, 2011 ஆண்டுகளில் சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பைகளை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார். 2019, 2019-ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருந்த அஸ்வின் - புனே, தில்லி, ராஜஸ்தான் அணிகளிலும் விளையாடியுள்ளார்.
2025 ஐபிஎல் போட்டிக்கு அஸ்வினை ரூ. 9.75 கோடிக்குத் தேர்வு செய்தது சிஎஸ்கே. எனினும் 9 ஆட்டங்களில் மட்டும் விளையாடிய அஸ்வின், இதுவரையில்லாத அளவுக்கு சராசரியாக ஒரு ஓவருக்கு 9.12 ரன்கள் கொடுத்து விமர்சனங்களை எதிர்கொண்டார்.
இதனால் அவரை அடுத்த வருடம் தக்கவைத்துக்கொள்ள சிஎஸ்கே நிர்வாகம் தயங்கியதாகத் தகவல்கள் வெளியான நிலையில் தற்போது ஓய்வு முடிவை எடுத்துள்ளார்.