ANI
விளையாட்டு

தோனி வந்தார்... 5 நிமிடங்கள் பேச வேண்டும் என்றார்.. ஓய்வை அறிவித்தார்...: நினைவுகூர்ந்த ரவி சாஸ்திரி!

'சிட்னியில் நான் இருக்க மாட்டேன். ஆனால், என் முழு ஆதரவும் உங்களுக்காக இருக்கும்.'

கிழக்கு நியூஸ்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, டெஸ்டிலிருந்து ஓய்வு பெற்ற தருணத்தை வர்ணனையாளர் ரவி சாஸ்திரி நினைவுகூர்ந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுடனான பிஜிடி டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ள அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். அஸ்வினைப் போல நிறைய வீரர்கள் பிஜிடி தொடருடன் ஓய்வு பெற்றுள்ளார்கள். குறிப்பாக, ஆஸ்திரேலிய பயணத்தின்போது ஓய்வை அறிவித்தவர்கள் ஏராளம்.

இதில் மிக முக்கியமான வீரர் எம்எஸ் தோனி. 2014-ல் மெல்போர்ன் டெஸ்ட் முடிந்தவுடன் டெஸ்டிலிருந்து மட்டும் ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். யாரும் எதிர்பார்த்திராத நேரத்தில் தோனியிடமிருந்து இந்த அறிவிப்பு வெளியானது. அப்போது இந்திய அணியின் இயக்குநராக ரவி சாஸ்திரி நியமிக்கபட்டிருந்தார். அவர் இந்திய அணியுடன் இருந்தார்.

அஸ்வினின் ஓய்வு முடிவு வெளியாகயுள்ள நிலையில், வர்ணனையாளராக உள்ள ரவி சாஸ்திரி, டெஸ்டிலிருந்து தோனி ஓய்வு பெற்ற தருணத்தை சக வர்ணனையாளர்களிடம் இன்று பகிர்ந்து கொண்டார்.

"ஓய்வு முடிவை அறிவிக்கும்போது, எம்எஸ் தோனி காத்திருக்கவில்லை. அவர் ஓய்வறைக்கு வந்தார். நான் பயிற்சியாளராக இருந்தேன்.

மெல்போர்னில் டெஸ்டை டிரா செய்தவுடன், வீரர்களிடம் 5 நிமிடங்கள் உரையாட வேண்டும் என தோனி என்னிடம் கேட்டார். நானும் சரி, டெஸ்டை டிரா செய்துள்ளதால் சிறப்பாகச் செயல்பட்டுள்ளீர்கள் என தோனி ஏதேனும் பேசுவார் என நினைத்தேன்.

அவரோ, 'நன்றி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன்' என்றார். இன்னும் ஒரு டெஸ்ட் மீதமுள்ளது என்று தோனியிடம் சொன்னேன்.

ஆனால் அவர் வந்தார், வெறும் 5 நிமிட உரையாடல் தான். வேறு எதுவும் இல்லை. 'டெஸ்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன், உங்களுடைய ஆதரவுக்கு நன்றி. சிட்னியில் நான் இருக்க மாட்டேன். ஆனால், என் முழு ஆதரவும் உங்களுக்காக இருக்கும்' என்றார்.

இதற்கு அடுத்து உலகக் கோப்பை நடைபெறவிருந்தது. உலகக் கோப்பை அணிக்கு அவர் தான் கேப்டன். அவ்வளவு தான் நடந்தது.

இன்றைய காலகட்டத்தில் கிரிக்கெட் விளையாட ஐபிஎல் போல நிறைய வாய்ப்புகள் உள்ளன. எனவே, சர்வதேச கிரிக்கெட்டில் தனக்கான நேரம் முடிவுக்கு வந்துவிட்டது என உணர்ந்தால், வீரர்கள் ஓய்வு பெற்றுவிடுவார்கள்.

தோனி ஓய்வு பெறுவது குறித்து யாருக்கும் எதுவும் தெரியாது. ஓய்வு பெறுவது குறித்து தோனி உன்னிடம் ஏதேனும் உரையாடினாரா என ஓய்வறையில் உள்ளவர்களிடம் கேட்டேன். இந்த முடிவு குறித்து அறிகுறி கூட யாருக்கும் தெரியவில்லை.

மூன்று நாள்களுக்கு முன்பு, தோனியுடன் வெளியே சென்று அவருடன் நேரத்தைச் செலவழித்தவர்களுக்குக்கூட, அவர் இங்கு வந்து என்ன பேசுவார் எனத் தெரியாது.

அப்போது அவர் 94 அல்லது 95 டெஸ்டுகளில் விளையாடியிருந்தார். இந்தியாவில் தோனி போன்ற நிலையில் இருக்கக்கூடிய ஒரு வீரர், 100 டெஸ்டுகளில் விளையாடினால், 100-வது டெஸ்டை ராஞ்சியில் நடத்த விரும்புவார்கள். அந்த 100-வது டெஸ்டை கொண்டாட, ஒட்டுமொத்த நகரமும் மைதானத்தில் தான் வந்து குவியும்.

ஆனால், அது எதுவும் தோனியைப் பொருட்படுத்தவில்லை. டெஸ்டில் எனக்கான நேரம் முடிவுக்கு வந்துவிட்டது எனக் கூறிவிட்டார்" என்றார் ரவி சாஸ்திரி.