@assamcric
விளையாட்டு

ரஞ்சி கோப்பை: வலுவான நிலையில் அசாம் அணி!

2-வது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்து, 99 ரன்கள் பின்தங்கியுள்ளது தமிழ்நாடு அணி.

யோகேஷ் குமார்

தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 107 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது அசாம் அணி.

தமிழ்நாடு - அசாம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குவஹாத்தியில் நவ.6 அன்று தொடங்கியது. டாஸ் வென்ற அசாம் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

தமிழ்நாடு அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. இருப்பினும், விஜய் சங்கர் 76 ரன்களும் ஆண்ட்ரே சித்தார்த் 94 ரன்களும் முஹமது அலி 49 ரன்களும் எடுத்து தமிழ்நாடு அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு அணி 338 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய அசாம் அணி 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.

கேப்டன் டெனிஷ் தாஸின் அதிரடி சதத்தால் அசாம் அணி முதல் இன்னிங்ஸில் 107 ரன்கள் முன்னிலை பெற்றது. 14 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் எடுத்து டெனிஷ் தாஸ் ஆட்டமிழந்தார்.

முதல் இன்னிங்ஸில் அசாம் அணி 445 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தமிழ்நாடு தரப்பில் அதிகபட்சமாக பிரதோஷ் ரஞ்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

107 ரன்கள் பின்தங்கியிருந்த நிலையில் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய தமிழ்நாடு அணி 3-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்துள்ளது.