@tnca
விளையாட்டு

ரஞ்சி கோப்பை: தமிழக அணி இன்னிங்ஸ் வெற்றி!

2-வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய குர்ஜப்நீத் சிங் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

யோகேஷ் குமார்

சௌராஷ்டிரம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

2024-25 பருவத்துக்கான ரஞ்சி கோப்பை அக்.11 அன்று தொடங்கியது.

கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு - சௌராஷ்டிரம் இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற சௌராஷ்டிரம் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

சாய் கிஷோர், சோனு யாதவ், முஹமது ஆகியோரின் அசத்தலான பந்துவீச்சில் சௌராஷ்டிரம் அணி முதல் இன்னிங்ஸில் 203 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக அர்பித் 62 ரன்கள் எடுத்தார். தமிழக அணி தரப்பில் சோனு யாதவ், சாய் கிஷோர், முஹமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய தமிழ்நாடு அணி 367 ரன்கள் எடுத்தது. சாய் சுதர்சன் மற்றும் ஜெகதீசன் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்தபோது, சாய் சுதர்சன் 82 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்.

இதைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெகதீசன் சதம் அடித்து அசத்தினார். மேலும், பிரதோஷ் ரஞ்சன் பால் 49 ரன்களும், இந்திரஜித் 40 ரன்களும் எடுத்தனர். சௌராஷ்டிரம் அணி தரப்பில் அதிகபட்சமாக உனத்கட் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் பிறகு விளையாடிய சௌராஷ்டிரம் அணி குர்ஜப்நீத் சிங் மற்றும் சோனு யாதவின் மிரட்டலான பந்துவீச்சில் 94 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஷெல்டன் ஜாக்சன் 38 ரன்களும், அர்பித் 22 ரன்களும் எடுத்தனர். தமிழக அணி தரப்பில் குர்ஜப்நீத் சிங் 6 விக்கெட்டுகளையும், சோனு யாதவ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் இந்த ஆட்டத்தில் தமிழக அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. குர்ஜப்நீத் சிங் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தமிழக அணி தனது அடுத்த ஆட்டத்தில் தில்லியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் அக்.18 அன்று தில்லியில் தொடங்குகிறது.