ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ராகுல் டிராவிட் விலகியுள்ளார்.
ஐபிஎல் 2025-க்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட டிராவிட்டின் பதவிக்காலம் ஓராண்டிலேயே நிறைவு பெறுகிறது.
"ஐபிஎல் 2026-க்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ராகுல் டிராவிட் நிறைவு செய்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயணத்தில் ராகுல் டிராவிட் முக்கியப் பங்கு வகித்துள்ளார். இவருடைய தலைமை, தலைமுறை கடந்து வீரர்களிடையே தாக்கத்தை உண்டாக்கியுள்ளது, அணியில் வலிமையான மதிப்புகளைப் புகுத்தியுள்ளது, அணியின் கலாசாரத்தில் அழியாத் தடத்தை விட்டுச் செல்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அமைப்பு குறித்து மறுஆய்வு செய்ததில், ராகுல் டிராவிட்டுக்கு விரிவான பதவி வழங்கப்பட்டது. அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்" என்று ராஜஸ்தான் அணி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸுடனான டிராவிட்டின் பயணம் 2011-ல் தொடங்கியது. 2011-ல் ராஜஸ்தான் அணியில் வீரராக விளையாடினார். 2012 மற்றும் 2013-ல் அணியை வழிநடத்தினார். 2014 மற்றும் 2015-ல் அணியின் இயக்குநர் மற்றும் ஆலோசகராகச் செயல்பட்டார்.
இதன்பிறகு, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு, ஐபிஎல் 2025-க்கு முன்பு ராஜஸ்தான் அணியுடன் மீண்டும் இணைந்தார். ஐபிஎல் 2025-ல் 14 ஆட்டங்களில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்தது. 2022-க்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் சந்தித்த மிகப் பெரிய பின்னடைவு இது.
Rahul Dravid | Rajasthan Royals | IPL 2025 | IPL 2026 |