ராகுல் டிராவிட் ANI
விளையாட்டு

எந்தச் சூழலையும் எதிர்த்துச் சிறப்பாக செயல்படுவோம்: ராகுல் டிராவிட் நம்பிக்கை

யோகேஷ் குமார்

எந்தச் சூழலையும் சமாளித்து விளையாடக்கூடிய அனுபவமும், திறமையும் எங்களிடம் உள்ளது என ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 1 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஆஸ்திரேலியா, இந்தியா, மே.இ. தீவுகள், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை ஆகிய பெரிய அணிகள் முதல் சுற்றுடன் வெளியேறின.

இந்நிலையில் சூப்பர் 8 சுற்றில், தனது முதல் ஆட்டத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தானுடன் விளையாடுகிறது. லீக் சுற்றில் ஒரு தோல்வியையும் சந்திக்காமல் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்திய அணி. இதுவரை அமெரிக்காவில் தனது அனைத்து ஆட்டங்களையும் விளையாடிய இந்திய அணி இனி மே.இ. தீவுகளில் விளையாட உள்ளது. எனவே, அங்கு இருக்கக்கூடிய சூழலையும் ஆடுகளங்களையும் இந்திய அணி சமாளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

ஆட்டத்திற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த டிராவிட் பேசியதாவது:

“சூழலை அறிந்துக்கொண்டு விளையாட வேண்டிய ஒரு விளையாட்டு கிரிக்கெட். திறமையைத் தாண்டி ஆடுகளங்களும், சூழலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு விளையாட்டாகவும் உள்ளது. மற்ற விளையாட்டுகளுடன் ஒப்பிடும் போது கிரிக்கெட்டில் ஆடுகளங்களால் ஆட்டத்தில் பெரிய மாற்றங்கள் நிகழும். இதை நாம் அமெரிக்க ஆடுகளங்களில் பார்த்தோம். மற்ற அணிகளும் அதனை கடந்து வந்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் 2022 டி20 உலகக் கோப்பை நடைபெற்ற போதும் இந்த நிலைமை இருந்தது. எனவே இதுபோன்ற சூழலை சமாளித்து அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற்றதை நினைத்து பெருமைப்படுகிறேன். எந்தச் சூழலையும் சமாளித்து விளையாடக்கூடிய அனுபவமும், திறமையும் எங்கள் அணியினரிடம் உள்ளது என நம்புகிறேன்” என்றார்.