ANI
ANI
விளையாட்டு

262 ரன்கள் இலக்கை விரட்டி பஞ்சாப் கிங்ஸ் உலக சாதனை!

யோகேஷ் குமார்

கேகேஆர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 262 ரன்களை விரட்டி உலக சாதனை படைத்தது.

நடப்பு ஐபிஎல் பருவத்தின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் அணிகள் கொல்கத்தாவில் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் சாம் கரண் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

வழக்கம்போல் ஆட்டத்தை அதிரடியாக தொடங்கியது கேகேஆர் அணி. சால்ட் மற்றும் நரைன் இருவரும் சிறப்பாக விளையாட பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் திணறினர். 6 ஓவர்களில் 76 ரன்களை சேர்த்த இந்த ஜோடி 8 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. இருவரும் அரை சதம் அடித்தனர்.

அருமையாக விளையாடிய இந்த கூட்டணி 138 ரன்களை சேர்த்தப் பிறகு ராகுல் சஹார் இந்த ஜோடியை பிரித்தார். நரைன் 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 32 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து சால்ட் 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 37 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு வெங்கடேஷ் ஐயர், ரஸ்ஸல், ஸ்ரேயஸ் ஐயர் என அனைவரும் அதிரடியாக விளையாட கேகேஆர் அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. ரஸ்ஸல் 12 பந்துகளில் 24 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 10 பந்துகளில் 28 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 23 பந்துகளில் 39 ரன்களும் எடுத்து வெளியேறினார்.

இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 261 ரன்கள் குவித்தது. ஏற்கெனவே கேகேஆர் அணி இந்தாண்டு தில்லிக்கு எதிராக 272 ரன்கள் குவித்தது.

இதைத் தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியது பஞ்சாப் அணி. ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடியது பேர்ஸ்டோ - பிரப்சிம்ரன் சிங் ஜோடி. 18 பந்துகளில் அரைசதம் அடித்த பிரப்சிம்ரன் எதிர்பாராத வகையில் ரன் அவுட் ஆனார். இந்த ஜோடி 6 ஓவர்கள் முடிவில் 93 ரன்களை சேர்த்தது.

5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 20 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் பிரப்சிம்ரன். இதன் பிறகு ரிலீ ரூசோவ் 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு ஷஷாங் சிங், பேர்ஸ்டோவுடன் ஜோடி சேர்ந்து வேகமாக ரன்களை சேர்த்தார். அதிரடியாக விளையாடிய பேர்ஸ்டோ சதம் அடித்தார். இது அவரது 2-வது ஐபிஎல் சதமாகும்.

இருவரும் சிறப்பாக விளையாட 8 பந்துகள் மீதமிருந்த நிலையில் பஞ்சாப் அணி இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக சாதனை படைத்தது.

பேர்ஸ்டோ 9 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 48 பந்துகளில் 108 ரன்களும், ஷஷாங் சிங் 8 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 28 பந்துகளில் 68 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நடப்பு ஐபிஎல் பருவத்தில் 7-வது முறையாக ஒரு அணி 250 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் டி20 வரலாற்றில் அதிக ரன்களை விரட்டிய அணி என்ற சாதனையைப் படைத்தது பஞ்சாப் அணி.

சர்வதேச அளவில் தெனனாப்பிரிக்கா அணி மே.இ. தீவுகள் அணிக்கு எதிராக 259 ரன்களை விரட்டி கடந்த 2023-ல் இந்த சாதனையைப் படைத்திருந்தது. மேலும் ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் அணி, பஞ்சாபுக்கு எதிராக 224 ரன்களை விரட்டி இந்த சாதனையைப் படைத்திருந்தது.

தற்போது அனைத்து சாதனைகளையும் உடைத்து உலக சாதனை படைத்துள்ளது பஞ்சாப் அணி.

பஞ்சாப் அணி 3-வது வெற்றியை பெற்று புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்துக்கு முன்னேறியது. கேகேஆர் அணிக்கு இது 3-வது தோல்வியாகும். அந்த அணி 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.