படம்: https://twitter.com/niranjan2428
விளையாட்டு

விரலில் 'தேர்தல் மை', கையில் 'வாக்கு இல்லை' எனப் பதாகை: கோவை போராட்டத்தின் விநோதம்!

இந்த அமைப்புக்கும் பாஜகவுக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை என்று அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கிழக்கு நியூஸ்

கோவையில் வாக்குரிமை மறுக்கப்பட்டதற்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களில் பெரும்பாலானோரின் விரல்களில் தேர்தல் மை இருந்தது பேசுபொருளாகியுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ல் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கோவையில் பாஜக சார்பில், கட்சியினுடைய மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிட்டார்.

கோவையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டதாக அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இதில் அரசியல் தலையீடு இருக்குமோ என்கிற சந்தேகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், பப்ளிக் ஃபார் அண்ணாமலை (Public for Annamalai) என்ற அமைப்பினர் கோவை செஞ்சிலுவை சங்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டதை எதிர்த்து பாதிக்கப்பட்ட கோவை பொதுமக்கள் எழுப்பும் உரிமை குரல் என்ற வாசகத்தைக் கொண்ட பேனரை கையில் ஏந்தியபடி இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஒரு சிலர் 'நான் உயிருடன்தான் இருக்கிறேன், எனக்கு வாக்கு இல்லை ஏன்..?' என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் சிலர் போராட்டத்தில் பங்கேற்றார்கள்.

ஆனால், இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற நிறைய பேரின் விரல்களில், வாக்களித்ததற்கான மை இருந்துள்ளது. தேர்தலில் வாக்களித்த பிறகும், எனக்கு இல்லை என்று பதாகைகளை ஏந்தியிருந்தது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.

இந்த அமைப்புக்கும் பாஜகவுக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.