புச்சி பாபு கிரிக்கெட் போட்டியில் மஹாராஷ்டிர அணிக்காக களமிறங்கவுள்ளார் பிரித்வி ஷா.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் புச்சி பாபு போட்டி சென்னையில் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 9 வரை நடைபெறுகிறது. இப்போட்டி தமிழ்நாடு கிரிக்கெட் சங்க யூடியூப் சேனலில் நேரலை செய்யப்படுகிறது.
லீக் ஆட்டங்கள் மூன்று நாள்களுக்கும் நாக் அவுட் ஆட்டங்கள் நான்கு நாள்களுக்கும் நடைபெறும். இரு தமிழக அணிகள் உள்பட 16 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 அணிகள் வீதம் நான்கு பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன.
இப்போட்டியில் விளையாடும் பிரித்வி ஷா, முதல்முறையாக மஹாராஷ்டிர அணி சார்பாக களமிறங்கவுள்ளார்.
இதுவரை மும்பைக்காக விளையாடி வந்த பிரித்வி ஷா, ஒழுக்கமின்மை காரணமாக மும்பை அணியின் ரஞ்சி மற்றும் விஜய் ஹசாரே கோப்பைப் போட்டிகளில் சேர்க்கப்படாமல் இருந்தார். இதைத் தொடர்ந்து, அண்மையில் மும்பை அணியிலிருந்து விலகிய பிரித்வி ஷா, மஹாராஷ்டிர அணிக்கு மாறினார்.
புச்சி பாபு போட்டியில் விளையாடும் அன்கித் பாவ்னே தலைமையிலான மஹாராஷ்டிர அணியில் ருதுராஜ் கெயிக்வாடும் இடம்பெற்றுள்ளார். ஐபிஎல் போட்டியில் காயமடைந்து வெளியேறிய ருதுராஜ் முதல்முறையாக இப்போட்டியின் மூலம் மீண்டும் ஆடுகளத்துக்குத் திரும்பியுள்ளார்.
மேலும் புச்சி பாபு போட்டியில் விளையாடும் மும்பை அணி, சிஎஸ்கே இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே தலைமையில் களமிறங்கவுள்ளது.
Buchi Babu Tournament | Prithvi Shaw | Ruturaj Gaikwad | Ayush Mhatre | Maharashtra Team | Mumbai Team