ANI
விளையாட்டு

இன்னும் என்ன தான் செய்ய வேண்டும்: கடவுளிடம் புலம்பும் பிரித்வி ஷா!

விஜய் ஹசாரேவுக்கான மும்பை அணியில் பிரித்வி ஷாவுக்கு இடமில்லை.

கிழக்கு நியூஸ்

விஜய் ஹசாரே போட்டிக்கான மும்பை அணியில் சேர்க்கப்படாத விரக்தியை பிரித்வி ஷா இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

விஜய் ஹசாரே கோப்பைப் போட்டிகள் டிசம்பர் 21 அன்று தொடங்குகிறது. நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்ற மும்பை அணி, விஜய் ஹசாரேவுக்கான மும்பை அணியை அறிவித்தது. இதில் பிரித்வி ஷா பெயர் இடம்பெறவில்லை.

அடுத்த சச்சின் டெண்டுல்கர் என மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட பிரித்வி ஷா 2018-ல் இந்திய அணிக்காக அறிமுகமானார். 19 வயதைப் பூர்த்தி செய்வதற்கு முன்பே அறிமுக டெஸ்டில் சதமடித்தார். எனினும், கடந்த 6 ஆண்டுகளில் மொத்தம் 11 சர்வதேச ஆட்டங்களில் மட்டுமே பிரித்வி ஷா விளையாடியுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியாலும் பிரித்வி ஷா தக்கவைக்கப்படவில்லை. ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாலும் தேர்வு செய்யப்படவில்லை. கூடுதல் எடை, உடற்தகுதியின்மை, பொறுப்பில்லாமல் செயல்பட்டதன் காரணமாக ரஞ்சிக் கோப்பை முதல் பகுதியில் மும்பை அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் மும்பை அணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும், அந்த அணி கோப்பை வெல்ல இவர் ஆற்றிய பங்களிப்பு ஒப்பீட்டளவில் மிகக் குறைவு. இந்தப் போட்டியில் மும்பைக்காக 9 ஆட்டங்களிலும் விளையாடிய பிரித்வி ஷா 156.34 ஸ்டிரைக் ரேட்டில் வெறும் 197 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதிகபட்சம் 49 ரன்கள்.

பிரித்வி ஷா குறித்து பேசிய மும்பை கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், "பிரித்வி ஷா கடவுளின் ஆசி பெற்றவர். அவரிடம் உள்ள திறமைகள், வேறு யாரிடமும் கிடையாது. கிரிக்கெட்டுக்கான ஒழுக்கத்தை மட்டும் அவர் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். யாரையும் குழந்தையைப் போல பார்த்துக்கொள்ள முடியாது, அல்லவா?" என்றார்.

விஜய் ஹசாரே போட்டிக்கான மும்பை அணியில் இடம்பெறாத ஏமாற்றத்தை இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார் பிரித்வி ஷா.

"65 இன்னிங்ஸில், 55.7 சராசரியில் 126 ஸ்டிரைக் ரேட்டில் 3,399 ரன்கள் எடுத்துள்ளேன். இருந்தபோதிலும் இது போதுமானதாக இல்லை. நான் இன்னும் என்ன தான் செய்ய வேண்டும், நீயே சொல் கடவுளே...

ஆனால், உன் மீது நான் தொடர்ந்து நம்பிக்கை கொள்வேன். அனைவருக்கும் என் மீது இன்னும் நம்பிக்கை இருக்கும் என நம்புகிறேன். நான் நிச்சயமாக மீண்டு வருவேன். ஓம் சாய் ராம்" என்று பிரித்வி ஷா குறிப்பிட்டுள்ளார்.

பிரித்வி ஷாவுக்கு ஆதரவாக கிரெக் சேப்பல், கெவின் பீட்டர்சனிடமிருந்து கருத்துகள் வந்தன. அவர் உடற்தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே மும்பை கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் உள்பட பலரின் விருப்பமாக உள்ளது.