ஐபிஎல் ஏலத்தில் 19 வீரர்களைத் தேர்வு செய்த ஆர்சிபி அணி, 11 வீரர்களுக்காகக் கடைசி வரை முயன்று எதிரணிகளிடம் அவர்களை இழந்தது.
கேகேஆர் அணி 2024 ஐபிஎல் கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்த வெங்கடேஷ் ஐயரை தேர்வு செய்ய ரூ. 23.5 கோடி வரை சென்றது ஆர்சிபி. எனினும் ரூ. 23.75 கோடிக்கு அவரைத் தட்டிப் பறித்தது கேகேஆர்.
தமிழக வீரர் நடராஜனை தேர்வு செய்ய ரூ. 10.50 கோடி வரை முயன்று, ரூ. 10.75 கோடிக்கு தில்லியிடம் பறிகொடுத்தது.
ஸ்டாய்னிஸை ரூ. 11 கோடிக்குத் தேர்வு செய்தது பஞ்சாப் அணி. ஆனால், ரூ. 10.75 கோடி வரை முயற்சித்துப் பார்த்துத் தோற்றது ஆர்சிபி.
மிட்செல் ஸ்டார்க்குக்காக ரூ. 11.5 கோடி வரை சென்று பார்த்தும் ரூ. 11.75 கோடிக்கு தில்லியிடம் அவரை இழந்தது.
ரபாடாவுக்காக ரூ. 10.50 கோடி வரை ஏலத்தில் போராடிப் பார்த்து ரூ. 10.75 கோடிக்கு குஜராத்திடம் அவரைப் பறிகொடுத்தது ஆர்சிபி. அதேபோல டேவிட் மில்லருக்காக ரூ. 7.25 கோடி வரை முயன்றும் தேர்வு செய்யமுடியாமல் போனது.
இவர்களைத் தவிர நிதிஷ் ராணா, மபாகா, பிரியன்ஷ் ஆர்யா, ஷுபம் துபே, கருண் நாயர் ஆகியோருக்காகவும் கடைசி வரை முயன்று தோற்றுப் போனது ஆர்சிபி.