இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்துள்ள இந்திய அணி முதலில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஓவென் மற்றும் மேட் ரென்ஷா அறிமுகமானார்கள். இந்திய அணியில் நிதிஷ் குமார் ரெட்டி அறிமுகமானார்.
ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் சர்வதேச டி20 மற்றும் டெஸ்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்கள். எனவே, ஒருநாள் தொடரில் இருவரையும் மீண்டும் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருந்தார்கள். சாம்பியன்ஸ் கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மா வசம் இருந்த கேப்டன் பொறுப்பு ஷுப்மன் கில்லிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் கில் முதல்முறையாக முழு நேர கேப்டனாக செயல்படுகிறார். விராட் கோலியும் சாம்பியன்ஸ் கோப்பைக்குப் பிறகு தற்போது தான் இந்திய அணிக்காகக் களத்துக்குத் திரும்புகிறார்.
இப்படி பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தான் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் பெர்த்தில் இன்று நடைபெற்றது. ஆனால், ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் விதமாக ரோஹித் சர்மா ஒரு பவுண்டரி மட்டுமே அடித்த நிலையில் 8 ரன்களுக்கு ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் துணை கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். 45 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது.
இதையடுத்து, மழை காரணமாக ஆட்டம் பலமுறை தடைபட்டது. வீரர்கள் களத்துக்கு வருவதும் திரும்புவதுமாக இருந்தார்கள். மழை குறுக்கீட்டால் இரு அணிகளுக்கும் தலா 26 ஓவர்கள் என ஆட்டம் குறைக்கப்பட்டது. கேஎல் ராகுல் மற்றும் அக்ஷர் படேல் ரன் குவிக்கும் வேகத்தை அதிகரித்தார்கள். 38 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அக்ஷர் படேல் ஆட்டமிழந்தார். கேஎல் ராகுல் 31 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
நிதிஷ் குமார் ரெட்டி தனது முதல் ஆட்டத்திலேயே முத்திரை பதிக்கும் விதமாக கடைசி ஓவரில் இரு சிக்ஸர்களை அடித்து சற்று ஆறுதல் அளித்தார். 26 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது.
இதன்பிறகு, டிஎல்எஸ் முறைப்படி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 26 ஓவர்களில் 131 ரன்கள் தேவை என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முதல் ஓவரில் டிராவிஸ் ஹெட் இரு பவுண்டரிகளை அடித்தாலும் அடுத்த ஓவரிலேயே அர்ஷ்தீப் சிங்கிடம் அவர் ஆட்டமிழந்தார். மேத்யூ ஷார்டும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஆனால் மிட்செல் மார்ஷ் மற்றும் ஃபிளிப்பி இணை இந்திய அணியிடமிருந்து வெற்றியைப் பறித்தது. குறிப்பாக மார்ஷ் தொடக்கத்திலேயே சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசி இந்தியப் பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார். மார்ஷ் - ஃபிளிப்பி இணை 45 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்தது. வாஷிங்டன் சுந்தர் தனது முதல் ஓவரிலேயே ஃபிளிப்பி (37) விக்கெட்டை வீழ்த்தி ஆறுதல் அளித்தார்.
மிட்செல் மார்ஷ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதி செய்தார். அந்த அணி 21.1 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து டிஎல்எஸ் முறைப்படி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை மிட்செல் மார்ஷ் வென்றார்.
இதன்மூலம், டெஸ்ட், சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் என அனைத்திலும் கேப்டனாக தனது முதல் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவி மோசமான சாதனையைப் படைத்துள்ளார் ஷுப்மன் கில். இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் ஆட்டம் அக்டோபர் 23 அன்று அடிலெய்டில் நடைபெறுகிறது.
Ind v Aus | India v Australia | IND v AUS | Shubman Gill | Rohit Sharma | Virat Kohli | Mitchell Marsh | Perth ODI |