ANI
விளையாட்டு

டி20 லீக் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடத் தடை! | Pakistan | Pakistan Cricket Board |

இதற்கான காரணம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

கிழக்கு நியூஸ்

பாகிஸ்தான் வீரர்கள் உலகளாவிய டி20 லீக் போட்டிகளில் விளையாடுவதற்கானத் தடையில்லாச் சான்றிதழுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

இம்முடிவு குறித்த அறிவிப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஏஜென்ட்களுக்கு கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அலுவலர் சுமேர் அஹமது சயத் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நோட்டீஸில், "லீக் போட்டிகளில் விளையாடுவது மற்றும் பாகிஸ்தான் வெளியே நடைபெறும் போட்டிகளில் வீரர்கள் பங்கேற்பது தொடர்புடைய அனைத்துத் தடையில்லாச் சான்றிதழ்களும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரின் ஒப்புதலின் பெயரில் மறு உத்தரவு வரும் வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியக் கோப்பை இறுதிச் சுற்றில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

பாபர் ஆஸம், முஹமது ரிஸ்வான் மற்றும் ஷஹீன் அஃப்ரிடி உள்ளிட்ட 7 பாகிஸ்தான் வீரர்கள் டிசம்பரில் தொடங்கும் பிக் பாஷ் போட்டியில் விளையாடத் தேர்வாகியுள்ளார்கள். ஐஎல்டி20 போட்டிக்கான ஏலத்தில் நசீம் ஷா, சயிம் அயூப் மற்றும் ஃபகார் ஸமான் உள்ளிட்ட 16 பாகிஸ்தான் வீரர்கள் இதில் இடம்பெற்றுள்ளார்கள்.

எனவே, தடையில்லாச் சான்றிதழ் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதில் ஏதேனும் விலக்கு அளிக்கப்படுமா அல்லது எத்தனை நாள்களுக்கு தடையில்லாச் சான்றிதழ் நிறுத்திவைக்கப்படும் என்பது பற்றிய தெளிவு எதுவும் இல்லை. பாகிஸ்தானின் முன்னணி உள்நாட்டு கிரிக்கெட் போட்டியான குவைத்-இ-ஆஸம் கோப்பைப் போட்டி செப்டம்பர் 22-ல் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், தாமதமாக அக்டோபரில் தான் தொடங்குகிறது.

உள்நாட்டு மற்றும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடுவதும்போது சிறப்பாகச் செயல்படுவதை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக இம்முடிவை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செயல்பாடுகளின் அடிப்படையில் தடையில்லாச் சான்றிதழை வழங்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், செயல்பாடுகளுக்கான அளவுகோல் என்ன, எதன் அடிப்படையில் மதிப்பிடப்படும் என்பது பற்றி தகவல் எதுவும் இல்லை.

Pakistan | Pakistan Cricket Board | PCB | League Cricket | T20 Leagues | Global Leagues | NOC |