பிடாக் பிரசன்னாவைப் பணியமர்த்த வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் ஆர்வலர் ஃபரித் கான் கோரிக்கை வைத்துள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான முதலிரு ஆட்டங்களில் தோல்வியடைந்ததன் மூலம், போட்டியை நடத்தும் பாகிஸ்தான் போட்டியிலிருந்து வெளியேறியது. பாகிஸ்தானின் இந்தத் தோல்வி, அந்நாட்டு ரசிகர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது. இந்நிலையில் பிடாக் பிரசன்னாவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பணியமர்த்த வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் ஆர்வலர் சமூக ஊடகப் பக்கத்தில் வெளிப்படையாக கோரிக்கை வைத்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் ஆர்வலர் ஃபரித் கான் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"வரவிருக்கும் 2026 டி20 உலகக் கோப்பை மற்றும் 2027 50 ஓவர் உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிரசன்னாவை பணியமர்த்த வேண்டும். உலகிலேயே இவர்தான் சிறந்த பயிற்சியாளர், அனலிஸ்ட். அனைத்து அணிகளையும் வீழ்த்தும் திறன்கொண்டவையாக தென்னாப்பிரிக்காவை மாற்றினார். ஐபிஎல் போட்டியில் ஆர்சிபியுடன் பணியாற்றியிருக்கிறார். பிஎஸ்எல் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியுடன் பணியாற்றியுள்ளார். மேலும் உலகம் முழுக்க நிறைய முன்னணி அணிகள் மற்றும் முன்னணி வீரர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட்டின் நலனுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிரசன்னாவை பணியமர்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறேன். தற்போதிலிருந்தே அடுத்த இரு ஐசிசி போட்டிகளைக் குறி வைத்து வெற்றி பெற வேண்டும். தென்னாப்பிரிக்காவில் ஒவ்வொரு அங்குலமும் அவருக்குத் தெரியும். ஆசியாவில் உள்ள சூழல்கள் குறித்தும் இவருக்கு பரந்த அனுபவம் உள்ளது" என்று ஃபரித் கான் பதிவிட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த பிடாக் பிரசன்னா, "நான் தயார். பிசிபி என்னை அணுகினால் இணைந்து பணியாற்ற சம்மதிப்பேன்" என்று பதிவிட்டார்.
2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தென்னாப்பிரிக்கா, நமிபியா, ஜிம்பாப்வேயில் நடைபெறுகிறது. இந்நிலையில் எக்ஸ் தளத்தில் நிகழ்ந்த இந்த உரையாடல் சமூக ஊடகங்களில் அதிகளவில் பரவி வருகிறது.