இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆசியக் கோப்பை ஆட்டத்தில் நடுவராகச் செயல்பட்ட ஆன்டி பைகிராப்டை உடனடியாக நீக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஷின் நக்வி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஆசியக் கோப்பையில் விளையாடி வருகின்றன. ஐசிசி மற்றும் பல நாடுகள் பங்கேற்கும் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடலாம் என இந்திய அணிக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானைச் சுலபமாக வீழ்த்தியது. எனினும் டாஸ் நிகழ்வின் போதும் ஆட்டம் முடிந்த பிறகும் இந்திய வீரர்கள் யாரும் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்கவில்லை, நேருக்கு நேர் பார்த்துக்கொள்ளவில்லை, உரையாடவில்லை. இதன் காரணமாக ஆட்டம் முடிந்த பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவை பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா புறக்கணித்தார். இந்திய வீரர்களின் இச்செயலை பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸன் கண்டித்தார்.
நேற்றே ஆட்ட நடுவரான ஆன்டி பைகிராப்டிடம் இதுகுறித்து முறையிட்டது பாகிஸ்தான் அணி. இந்நிலையில் இப்பிரச்னைகளுக்குக் காரணமான ஆட்ட நடுவர் ஆன்டி பைகிராப்டைப் போட்டியிலிருந்தே நீக்கவேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆகியவற்றின் தலைவரான மொஷின் நக்வி வேண்டுகோள் விடுத்துள்ளார். டாஸ் நிகழ்வின்போது இரு கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்ள வேண்டாம் என ஆன்டி பைகிராப்ட் அறிவுறுத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு கூறிய நிலையில் அடுத்தக்கட்டமாக அவரை நீக்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
விளையாட்டின் ஆன்மாவை இந்திய வீரர்கள் பின்பற்றவில்லை என்கிற குற்றச்சாட்டுக்கு இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பதில் அளிக்கையில், வாழ்க்கையில் சில விஷயங்கள் விளையாட்டின் ஆன்மாவை விடவும் மேலானது என்றார்.