மகளிர் வில்வித்தை காலிறுதிச் சுற்றில் இந்திய அணி நெதர்லாந்திடம் 6-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மகளிர் வில்வித்தையில் தரவரிசையில் 4-வது இடத்தைப் பிடித்த இந்திய அணி நேரடியாகக் காலிறுதிக்குத் தகுதி பெற்றது. பஜன் கௌர், தீபிகா குமாரி, அங்கிதா பகத் ஆகியோர் மகளிர் அணியில் இடம்பெற்றிருந்தார்கள்.
மகளிர் வில்வித்தை காலிறுதிச் சுற்று இன்று நடைபெற்றது. தரவரிசையில் பின்தங்கிய நிலையில் உள்ள நெதர்லாந்தை எதிர்கொண்ட இந்திய அணி, ஒலிம்பிக்ஸ் காலிறுதிச் சுற்று என்பதால் அழுத்தத்தை உணர்ந்ததா எனத் தெரியவில்லை.
இந்த அணியிடமிருந்து பதக்கத்தை எதிர்பார்த்த நிலையில், நெதர்லாந்திடம் 6-0 என்ற கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது.
முதல் செட்டிலிருந்து அங்கிதா மற்றும் தீபிகா குமாரி தடுமாறினார்கள். குறிப்பாக, அங்கிதா பகத் கடைசி செட்டில் 4 புள்ளிகளைக் குறிவைத்தது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. பஜன் கௌர் மட்டும் தொடர்ச்சியாக 10 புள்ளிகளைக் குறிவைத்து அசத்தினார்.
இதனால் 52-51, 54-49, 53-48 என்ற கணக்கில் இந்தியா நெதர்லாந்திடம் தோல்வியடைந்தது.
ஆடவர் வில்வித்தை காலிறுதிச் சுற்றுக்கும் இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. இது நாளை நடைபெறுகிறது.