ANI
விளையாட்டு

வித்தியாசமான முறையில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் தொடக்க விழா

ச.ந. கண்ணன்

ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் விமரிசையாகத் தொடங்கியுள்ளன.

ஜூலை 6 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக்ஸில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

அனைவரும் எதிர்பார்த்த தொடக்க விழா, முதல்முறையாக விளையாட்டு அரங்கில் நடைபெறாமல் திறந்த வெளியில் நடைபெற்றது. ஈபிள் கோபுரம் அருகே செயின் நதிக்கரையில் வித்தியாசமான முறையில் பிரமாண்டமான கலைநிகழ்ச்சிகளுடன் தொடக்க விழா நடைபெற்று அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் 100 படகுகளில் கொடிகளை ஏந்தியபடி 6 கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்துச் சென்றார்கள். இந்திய அணியின் கொடியை டேபிஸ் டென்னிஸ் வீரரான சரத் கமலும் பாட்மிண்டன் நட்சத்திரம் பி.வி. சிந்துவும் ஏந்திச் சென்றார்கள்.

லேடி காகா, செலின் டியோன் போன்ற புகழ்பெற்ற இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் தொடக்க விழாவை அலங்கரித்தன. ஸீன்டின் ஸிடேன், ரஃபேல் நடால், செரீனா வில்லியம்ஸ், கார்ல் லூயிஸ் போன்ற விளையாட்டுப் பிரபலங்களும் தொடக்க விழாவில் கலந்துகொண்டார்கள். இந்திய நேரப்படி அதிகாலை 2.25 மணியளவில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.