ANI
விளையாட்டு

பாகிஸ்தான் அணியில் பாபர் ஆஸம் நீக்கம்!

நான்கு நட்சத்திர வீரர்களுக்கு அடுத்த இரு டெஸ்டுகளில் இடமில்லை

யோகேஷ் குமார்

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது மற்றும் 3-வது டெஸ்டுக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர் ஆஸம், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த டெஸ்டில் ஒரு இன்னிங்ஸில் 500 ரன்களுக்கு மேல் அடித்தும், இன்னிங்ஸ் தோல்வி கண்ட முதல் அணி எனும் மோசமான சாதனையை படைத்தது பாகிஸ்தான்.

இந்நிலையில் இந்த தோல்வியைத் தொடர்ந்து பாகிஸ்தான் தேர்வுக் குழுவில் முன்னாள் வீரரான ஆகிப் ஜாவெத், அஸார் அலி, பிரபல நடுவர் அலீம் தார் ஆகியோர் இணைந்தனர். இதனால் பாகிஸ்தான் அணியில் அதிரடியான மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இருந்து பாபர் ஆஸம் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது.

கடைசியாக விளையாடிய 18 டெஸ்ட் இன்னிங்ஸில் பாபர் ஆஸம் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. 2023 முதல் அவர் விளையாடிய 9 டெஸ்டுகளில், அவரது சராசரி 21-க்கும் குறைவாக உள்ளது.

பாகிஸ்தானின் டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டனாக இருந்த பாபர் ஆஸம், சமீபத்தில் அந்த பதவியில் இருந்து விலகினார்.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 2-வது மற்றும் 3-வது டெஸ்டுக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பாபர் ஆஸம், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அஹமது (உடல்நிலை சரியில்லாத காரணத்தால்) ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக ஹஸிபுல்ல, மெஹ்ரான் மும்தாஸ், கம்ரான் குலாம், முஹமது அலி ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஷாஹீன் அஃப்ரிடி கடைசியாக விளையாடிய 11 டெஸ்ட் இன்னிங்ஸில் 17 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். அதேபோல், நசீம் ஷா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 31 ஓவர்கள் பந்துவீசி 157 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பாகிஸ்தான் அணி கடைசியாக விளையாடிய 6 டெஸ்டுகளிலும் தோல்வி அடைந்த நிலையில் அந்த அணி புதிய கேப்டனைத் தேடுமா என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால், இந்த இரு டெஸ்டுகளுக்கான கேப்டனாக ஷான் மசூதே நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் அக்டோபர் 15 அன்று முல்தானில் தொடங்குகிறது.