@TheRealPCB
விளையாட்டு

3-வது டெஸ்ட்: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற பாகிஸ்தான்!

9 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

யோகேஷ் குமார்

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 3 டெஸ்டுகளில் விளையாடியது.

முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ராவல்பிண்டியில் கடந்த அக்.24 அன்று தொடங்கியது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 267 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 89 ரன்களும், பென் டக்கெட் 52 ரன்களும் எடுத்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் சஜித் கான் 6 விக்கெட்டுகளையும் நோமன் அலி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 344 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சவுத் ஷகீல் 134 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து அணி தரப்பில் ரேஹன் அகமது 4 விக்கெட்டுகளையும் சோயிப் பஷீர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன் பிறகு 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி சஜித் கான் மற்றும் நோமன் அலியின் சுழலில் 112 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஜோ ரூட் 33 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தான் தரப்பில் நோமன் அலி 6 விக்கெட்டுகளையும் சஜித் கான் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

சஜித் கான் மற்றும் நோமன் அலி இணைந்து இந்த டெஸ்டில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

முன்னதாக 2-வது டெஸ்டில் சஜித் கான் 9 விக்கெட்டுகள், நோமன் அலி 11 விக்கெட்டுகள் என அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

இதைத் தொடர்ந்து 36 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணி 3.1 ஓவர்களில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது.

இதன் மூலம் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

பாகிஸ்தான் அணி 2021-க்கு பிறகு சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரையும், ஷான் மசூத் தலைமையில் முதல் டெஸ்ட் தொடரையும் வென்றது.