ஆடவர் ஹாக்கி: காலிறுதியில் எந்த அணியுடன் இந்தியா மோதுகிறது? 
விளையாட்டு

ஆடவர் ஹாக்கி: காலிறுதியில் எந்த அணியுடன் இந்தியா மோதுகிறது?

யோகேஷ் குமார்

ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி காலிறுதியில் இந்திய அணி கிரேட் பிரிட்டனுடன் விளையாடவுள்ளது.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று கோலாகலமாகத் தொடங்கியது.

இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் 7-வது நாளான நேற்றுடன் ஆடவர் ஹாக்கியின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.

ஏ பிரிவில் இருந்து ஜெர்மனி, நெதர்லாந்து, கிரேட் பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய அணிகளும், பி பிரிவில் இருந்து பெல்ஜியம், இந்தியா, ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா ஆகிய அணிகளும் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில் காலிறுதிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

முதல் காலிறுதியில் இந்தியா - கிரேட் பிரிட்டன் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் நாளை (ஆகஸ்ட் 4) மதியம் 1.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஏற்கெனவே 2020 ஒலிம்பிக்ஸ் காலிறுதியில் இந்திய அணி கிரேட் பிரிட்டனுடன் விளையாடியது. இதில் இந்தியா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

மற்ற காலிறுதி ஆட்டங்களில் பெல்ஜியம் - ஸ்பெயின், நெதர்லாந்து - ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா - ஜெர்மனி ஆகிய அணிகள் மோதுகின்றன.

அனைத்து ஆட்டங்களும் நாளை நடைபெறவுள்ளது.