நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய ஆடவர் அணி!  @India_AllSports
விளையாட்டு

ஒலிம்பிக்ஸ் ஹாக்கி: நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய ஆடவர் அணி!

இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

யோகேஷ் குமார்

ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி நேற்று இரவு கோலாகலமாகத் தொடங்கியது.

இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இந்தியா சார்பாக 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 பேர், 16 வகையான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் ஆடவர் ஹாக்கியின் லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின.

ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் நியூசிலாந்து அணி முதல் கோலை அடித்தது. இதன் பிறகு 24-வது நிமிடத்தில் இந்திய வீரர் மன்தீப் சிங் கோல் அடித்து 1-1 என்ற கணக்கில் சமன் செய்தார்.

அடுத்ததாக 34-வது நிமிடத்தில் விவேக் சாகர் பிரசாத்தால் மீண்டும் இந்திய அணி கோல் அடித்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதன் பிறகு நியூசிலாந்து வீரர் சைமன் கோல் அடித்து 2-2 என்ற கணக்கில் சமன் செய்தார்.

இதைத் தொடர்ந்து இரு அணிகளும் 3-வது கோலை அடிக்க போராடின. ஆட்டம் விறுவிறுப்பாகச் சென்றது. 2 நிமிடங்கள் மட்டுமே மிதமிருந்த நிலையில் பெனால்டி ஸ்டிரோக் மூலமாக ஹர்மன்பிரீத் சிங் கோல் அடிக்க இந்திய அணி 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இறுதியில் நியூசிலாந்து அணியால் கோல் அடிக்க முடியாததால் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.