முதல் நாள் இந்தியா அட்டவணை! ANI
விளையாட்டு

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: முதல் நாள் இந்தியா அட்டவணை!

யோகேஷ் குமார்

பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி நேற்று இரவு கோலாகலமாகத் தொடங்கியது.

2024 ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 11 வரை பாரிஸில் நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இந்தியா சார்பாக 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 பேர், 16 வகையான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

இதில் 72 வீரர்கள் முதல்முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

தமிழகத்தில் இருந்து 12 பேர் பங்கேற்கின்றனர். தடகளப் பிரிவில் அதிகபட்சமாக 29 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

முன்னதாக நடைபெற்ற வில்வித்தை தகுதி சுற்றில் 3-வது இடத்தைப் பிடித்த இந்திய ஆடவர் அணி நேரடியாக காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. மேலும், இந்திய மகளிர் அணியும் நேரடியாக காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

இந்நிலையில் நேற்று ஈபிள் கோபுரம் அருகே உள்ள புகழ்பெற்ற செயின் நதிக்கரையில் வித்தியாசமான முறையில் பிரமாண்டமான கலைநிகழ்ச்சிகளுடன் தொடக்க விழா நடைபெற்றது.

ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் வீரர்களின் அணிவகுப்பு, மைதானத்தில் அல்லாமல் முதன்முறையாக நதியில் நடத்தப்பட்டது.

சுமார் 100 படகுகளில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அந்தந்த நாடுகளின் கொடியை ஏந்தியபடி 6 கி.மீ தூரம் அணிவகுத்துச் சென்றனர்.

இந்தியா சார்பாக தேசியக் கொடியை டேபிள் டென்னிஸ் வீரரான சரத் கமல் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்து ஆகியோர் ஏந்திச் சென்றனர்.

இந்த அணிவகுப்பு முடிந்தவுடன் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டு 33-வது ஒலிம்பிக் போட்டி தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தொடக்க விழாவை தொடர்ந்து இன்று முதல் விளையாட்டுகள் ஆரம்பமாகின்றன.

முதல் நாள் இந்தியா அட்டவணை

துப்பாக்கிச் சுடுதல் தகுதி சுற்று (10 மீட்டர் ஏர் ரைபிள்) - மதியம் 12.30 மணி முதல்

டென்னிஸ் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று - மதியம் 3.30 மணிக்கு

பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர், மகளிர் இரட்டையர், ஆடவர் ஒற்றையர் பிரிவு - மாலை 7.10 மணி முதல்

ஆடவர் ஹாக்கி லீக் ஆட்டம்: இந்தியா vs நியூசிலாந்து, இரவு 9 மணிக்கு

டேபில் டென்னிஸ் - ஆடவர் ஒற்றையர் பிரிவு, மாலை 7.15 மணி முதல்